» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலுக்கடியில் குமரிக்கண்டம் குறித்து அகழாய்வு : மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

வியாழன் 29, அக்டோபர் 2020 8:45:47 AM (IST)

கடலுக்கு அடியில் குமரிக்கண்டம் குறித்து அகழாய்வு நடத்த முடியுமா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த நாராயணமூர்த்தி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழர்களின் பழம்பெரும் அடையாளமாக குமரிக்கண்டம் விளங்கியது என்பது தொல்காப்பியம், அகத்தியம் உள்பட பல்வேறு பழங்கால இலக்கியங்கள் மூலம் தெரியவருகிறது. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிபடுத்தப்பட்டு உள்ளன. அதன்படி குமரிக்கண்டம் கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

மேலும் ஒரிசா பாலு என்பவர் குமரிக்கண்டம் தொடர்பாக நடத்தி வரும் ஆய்வில், தமிழ்மொழியின் 30 சதவீதத்தை தற்போது மடகாஸ்கரில் இருக்கும் பழங்குடியினர் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. நீருக்கு அடியில் அகழாய்வு நடத்தினால் குமரிக்கண்டம் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியில் வரும். மகாபாரதத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் துவாரகாவில் நீருக்கு அடியில் தொல்பொருள் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசும் தேசிய கடல்சார் நிறுவனத்தோடு இணைந்து பூம்புகாரில் கடலுக்கு அடியில் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதுபோல குமரி மாவட்டத்திற்கு தென் பகுதியில் கடலுக்கு அடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குமரிக்கண்டம் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ஒரிசா பாலு, இந்த விஷயத்தில் கோர்ட்டுக்கு உதவ வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மகாபாரதத்தில் தமிழ் மன்னர்கள், தமிழ்மொழி பற்றி குறிப்பு உள்ளது. தமிழ்மொழியும், தமிழ்மன்னர்களும் மிக பழமை வாய்ந்தவர்கள் என இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். கடலுக்கு அடியில் குமரிக்கண்டம் குறித்து அகழாய்வு நடத்த முடியுமா? என்பது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory