» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு: முதல்வ‌ர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழன் 19, நவம்பர் 2020 8:53:27 AM (IST)

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றுமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் தேர்வை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின்பேரில் தான் நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) காலை கூட 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்தது.

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. நீட் தேர்வால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து உள்ஒதுக்கீடாக 7.5 சதவீதம் அறிவித்து அதன் மூலம் 313 பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தி.மு.க. அதில் அங்கம் வகித்தபோது நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை.

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். ஏழை-எளிய மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக நான் பெருமை கொள்கிறேன். புதிய கல்வி கொள்கை குறித்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நடக்கும்போது அது பற்றி கருத்து சொல்வது நன்றாக இருக்காது. சிறையில் இருந்து வெளிவரும் சசிகலாவால் தமிழகத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆன்லைன் லாட்டரி தடை குறித்து சட்டம் இயற்றி உள்ளோம். அதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தும். அவர்களிடம் தான் முழு அதிகாரம் இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இப்போது சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து

The TruthNov 19, 2020 - 02:13:30 PM | Posted IP 162.1*****

DMK and ADMK has 2 Tongues, they make people fools.

ராமநாதபூபதிNov 19, 2020 - 11:33:45 AM | Posted IP 108.1*****

அதுக்கு நீங்க என்ன செஞ்சீங்க ஒன்னு சொல்லுங்க பார்ப்போம். வாய் மட்டும் தான் இருக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory