» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர புதிதாக 2 படகு சேவை

புதன் 25, நவம்பர் 2020 5:38:37 PM (IST)கன்னியாகுமரியில் ரூ.9.15 கோடி மதிப்பில் 2 புதிய பயணியர் படகுகள் மற்றும் படகுதளம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பிற்கிணங்க, கன்னியாகுமரி பூம்புகார் படகு துறையிலிருந்து, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில், ரூ.7.85 கோடி செலவில், இ.ப.தாமிரபரணி கே.கே.11 (ரூ.4.35 கோடி) மற்றும் இ.ப.திருவள்ளுவர் கே.கே.12 (ரூ.3.50 கோடி) ஆகிய இரண்டு படகுகளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், முன்னிலையில், இன்று (25.11.2020) கொடியசைத்து, துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் , கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தினை துவக்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி , கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த 10.11.2020 அன்று ஆய்வு மேற்கொண்டபோது, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு போக்குவரத்தை மீண்டும் துவக்க வேண்டுமென்று, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா சங்கத்தின் பொறுப்பாளர்களும், ஹோட்டல் நிர்வாகிகளும், கன்னியாகுமரி மாவட்டம், சர்வதேச அளவில் சுற்றுலாத்தளமாக உள்ளது எனவும், தற்போதைய கொரோனா காலத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறுமை கோட்டிற்கு கீழே சென்றுவிட்டோம் எனவும், மற்ற மாவட்டங்களை போல படகு போக்குவரத்தை மீண்டும் கன்னியாகுமரியில் துவக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்வதற்கு ஏதுவாக, ஒரு படகை இயக்கி, அதன்வாயிலாக மக்கள் செல்வதற்கு வசதியாக உள்ளதா என்பதை நேற்று முன்னோட்டம் பார்த்தோம். அதன்படி பொதுமக்களும் சமூக இடைவெளியினை கடைபிடித்து பயணம் செய்தார்கள். மேலும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, இன்று பொதுவிடுமுறையாக இருந்தாலும், படகு போக்குவரத்து இன்று முதல் துவங்கும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதனடிப்படையில், படகு போக்குவரத்து இன்று துவங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, கைகளை அவ்வப்போது கை கழுவும் திரவம் வாயிலாக சுத்தமாக வைத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டுமெனவும், தற்போதைய கொரோனா காலத்தில், பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் தமிழக அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டுமென அன்பான வேண்டுகோளினை, தமிழக அரசின் சார்பாகவும்;, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன் - என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்கள்.நிகழ்ச்சியில், எஸ்.ஆஸ்டின், எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் ஈ.நீலப்பெருமாள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து மேலாளர் செல்லப்பா, தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பாளர் தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பாளர் இராஜேந்திரன், டி.டி.சதாசிவம், சுகுமாரன், ஜெசீம், வீரபுத்திரன், ஐ.குமார், தம்பி தங்கம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory