» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது நிவர் புயல் : பலத்தமழை - மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன!

வியாழன் 26, நவம்பர் 2020 9:09:11 AM (IST)

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "நிவர்" புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. பல்வேறு இடங்களில் பலத்தமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன.

தெற்கு வங்கக்கடலில் கடந்த சனிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அடுத்தடுத்து வலுவடைந்து செவ்வாய்க்கிழமை காலையில் "நிவர்" புயலாகவும், அன்று இரவில் தீவிர புயலாகவும் மாறியது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

அப்போது புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. நேற்று மாலையில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கடலூருக்கு தென் கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்த "நிவர்" புயல்,  மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. தொடர்ந்து, இது தீவிர புயலாக மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. படிப்படியாக   சில மணி நேரங்களில் முழுமையாக கரையைக் கடந்தது. 

தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிப்பு: புயல் கரையைக் கடந்தபோது, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்தது. பல இடங்களில் தகவல் தொடர்பும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் தென்னை  உள்ளிட்ட மரங்கள் சூறாவளி காற்றால் அடியோடு சாய்ந்தன. வடசென்னையில்... "நிவர்" புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அதிகபட்சமாக வடசென்னையில் 160 மி.மீ.  மழை பதிவானது.

மழை தொடரும்: 

தமிழகத்தில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (நவ.26, 27) ஆகிய இரு நாள்கள் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று (நவ.26) வடதமிழகத்தில் பல இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அநேக இடங்களில் நவம்பர் 27-ஆம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சில வேளைகளில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory