» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்கம்பி மீது பஸ் உரசியதில்மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பலி :தஞ்சை அருகே சோகம்

புதன் 13, ஜனவரி 2021 9:07:43 AM (IST)

தஞ்சை அருகே ரோட்டோரத்தில் உள்ள மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நேற்று காலை தஞ்சைக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ரபேல்புரம் கிராமத்தை சேர்ந்த ஜான் என்பவர் ஓட்டினார். நேமம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டக்டராக பணியாற்றினார். அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்துவேலி, கண்டமங்கலம், மைக்கேல்பட்டி மற்றும் வரகூர் ஆகிய ஊர்களில் மேலும் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் புறப்பட்டு சென்று கொண்டு இருந்தது.

வரகூரில் இருந்து புறப்பட்டு சற்று தூரம் சென்ற நிலையில் எதிரே ஒரு லாரி வந்தது. அந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் ஜான், பஸ்சை இடது பக்கம் ஓரமாக ஒதுக்கியுள்ளார். அப்போது அங்கு புதிதாக சாலை அமைப்பதற்காக பள்ளம் தோண்டி அதில் ஜல்லி பரப்பப்பட்டு இருந்தது. அதில் பஸ்சின் முன்பக்க டயர் இறங்கியது.

அப்போது ஓரத்தில் தாழ்வாக தொங்கிய மின்சார கம்பி, பஸ்சின் மீது பட்டு உரசியது. இதில் பஸ்சில் நின்று கொண்டு இருந்த தஞ்சை மாவட்டம் வரகூரைச் சேர்ந்த கவுசல்யா (வயது 39), கல்யாணராமன் (65), கருப்பூரைச் சேர்ந்த கணேசன் (50), அரியலூர் மாவட்டம் விழுப்பணங்குறிச்சியைச் சேர்ந்த நடராஜன் (65) ஆகிய 4 பேர் மீது மின்சாரம் தாக்கியது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் செந்தலையை சேர்ந்த முனியம்மாள்(50) என்பவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை அருகில் உள்ள செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர் தவிர பஸ்சில் பயணம் செய்த மேலும் பலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

பஸ்சில் சென்றவர்கள் மீது மின்சாரம் தாக்கியதும், இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானதும் குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்்டுத்தீ போல் பரவியது. இதனால் வரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory