» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களுக்கான நிவாரணம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (21.1.2021) வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:   புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 18.1.2021 அன்று மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன.  இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அந்தோணிராஜ் என்பவரின் மகன் மெசியா, வெள்ளைச்சாமி என்பவரின் மகன் நாகராஜ், செல்லம் என்பவரின் மகன் செந்தில்குமார், நிக்சன்டார்வின் என்பவரின் மகன் சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். 

இம்மீனவர்கள் 19.1.2021 அன்றே கரைக்கு திரும்பி இருக்கவேண்டும். அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று  அறிந்தவுடன், எனது உத்தரவின்பேரில் இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. தற்போது இந்த 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் வரப்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் இறந்த 4 மீனவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியின் அடிப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு/ அரசு நிறுவனங்களில் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம்  வழங்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கைக்கு கண்டனம்

கடலில் தமிழக மீனவர் படகுகளைத் தாக்கி தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிளேன். இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory