» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக செய்த அதே தவறை திமுகவும் செய்யலாமா? ராமதாஸ், டிடிவி தினகரன் கண்டனம்

சனி 12, ஜூன் 2021 4:37:27 PM (IST)

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு: ஊரடங்கு தளர்வுகளின் ஒருகட்டமாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாகப் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளைத் திறப்பது கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

ஒருபுறம் கரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதைப் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறைச் செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு: மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல்வர், அதற்கு நேர்மாறாக நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும். ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.

எனவே, கரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக நோய்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 


மக்கள் கருத்து

வீரப்பாJun 13, 2021 - 10:20:47 AM | Posted IP 108.1*****

திருட்டு திமுகவும் திருட்டு அதிமுகவும் ஒன்னு தான், சில மக்கள் தான் திருடர்களுக்கு அடிமை ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory