» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி

புதன் 4, ஆகஸ்ட் 2021 10:36:00 AM (IST)

காவல் துறை பணிக்கான உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா வெற்றி வாகை சூடினார். காவல் துறையில் பணியாற்றுவது எனது கனவு என்று பேட்டியளித்துள்ளார்.

தமிழக காவல் துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கு மட்டும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

நேற்று 2-வது நாளாக பெண்கள் கலந்து கொண்ட ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடந்தது. நேற்றைய தேர்விலும் 500 பெண்கள் பங்கேற்றனர். அதில் கர்ப்பமாக இருந்த 4 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் குழந்தை பெற்று உடல் நலமான பிறகு, தனியாக அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கான ஆரம்பகட்ட உடல் தகுதி தேர்வில் திருநங்கை தீபிகா (27) பங்கேற்றார். அவர் அதில் வெற்றி வாகை சூடினார். அவர் கூறுகையில், போலீஸ் வேலைக்கு சேருவது எனது கனவு என்று தெரிவித்தார்.

ஏற்கனவே 3 முறை போலீஸ் தேர்வில் வெற்றி கிட்டவில்லை. இந்த முறை கண்டிப்பாக தேர்வு பெறுவேன் என்று அவர் உறுதிபட கூறினார். தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி இவரது சொந்த ஊர். 10-வது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை இருளப்பன் கூலி தொழிலாளி. தாயார் முத்துலட்சுமி. ஒரு சகோதரன், ஒரு சகோதரி உள்ளனர். இவர் 2-வது கட்ட உடல் தகுதி தேர்வை வரும் திங்கட்கிழமை சந்திக்க உள்ளார். தமிழக போலீஸ்துறையில் ஏற்கனவே 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 திருநங்கைகள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory