» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவரைக் கடுமையாக தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சனி 16, அக்டோபர் 2021 4:56:41 PM (IST)

சிதம்பரத்தில் அரசுப் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கன்னிதமிழ்நாடு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (56). சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனாா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த புதன்கிழமை முறையாக பள்ளிக்கு வராதது தொடா்பாக மாணவா்கள் சிலரைக் கண்டித்தாராம். அப்போது, மாணவா் ஒருவரை ஆசிரியா் சுப்பிரமணியன் பிரம்பால் தாக்கி, காலால் உதைப்பதை, அந்த வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர், ஆசிரியருக்குத் தெரியாமல் தனது செல்போனில் விடியோ பதிவு செய்துள்ளார். 

அந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த விடியோவில், ஆசிரியர், மாணவரின் தலைமுடியை பிடித்துக் கொண்டு பிரம்பால் தாக்குவதும், காலால் மாணவரை எட்டி உதைப்பதும், தன்னை அடிக்காமல் மன்னித்து விட்டுவிடுமாறு மாணவர், ஆசிரியரின் காலைப் பிடித்துக் கொண்டு கதறுவதும் பதிவாகியுள்ளது. இதுதொடா்பாக சிதம்பரம் வட்டாட்சியா் ஆனந்தன், நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் பள்ளியில் விசாரணை நடத்தினா். 17 வயது மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவர், பள்ளிக்கு சரியாக வராமல் வகுப்பை புறக்கணித்ததால், ஆசிரியர் கடும் கோபத்தில் தாக்கியிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர காவலர்கள் ஆசிரியா் சுப்பிரமணியன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வியாழக்கிழமை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்தனா். இதனிடையே, ஆசிரியா் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை சிறையிலுள்ள அவரிடம் சிதம்பரம் ஆதிதிராவிடா் நலத் துறை வட்டாட்சியா் சத்தியன், பள்ளித் தலைமையாசிரியா் குகநாதன் ஆகியோா் வழங்கினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory