» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்பு மனு ஏற்பு: ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். போட்டியின்றி தேர்வு!

ஞாயிறு 5, டிசம்பர் 2021 8:43:33 PM (IST)

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.


மேலும் 3, 4-ந் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று மனுதாக்கல் செய்தனர். நேற்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்கள் பெறப்பட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டாலும், வேறு சிலரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழியவும், 15 பேர் வழி மொழியவும் செய்து இருக்க வேண்டும். இந்த 30 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்களாக இருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டவிதி கூறுகிறது.

எனவே, இவற்றை காரணம் காட்டி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே, வேட்புமனு திரும்ப பெறும் நாளான 6-ந் தேதி (நாளை) மாலையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.  இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.


மக்கள் கருத்து

சாதாரண தொண்டன்Dec 7, 2021 - 08:26:15 AM | Posted IP 173.2*****

சாதாரண படித்த ஆள் போட்டிக்கு வேட்பு மனுக்களை தாக்கினால் அடித்து விரட்டுவார்களாம், இவரோ போட்டி இன்றி தேர்வாம்... என்னமா நடக்குது நாட்டில்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory