» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு: புதிய கட்டுப்பாடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

புதன் 5, ஜனவரி 2022 4:25:47 PM (IST)

தமிழகத்தில் நாளை(ஜன.6) முதல் வார நாட்களில்‌ இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலம்‌ முழுவதும்‌ 6.1.2022 முதல்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌.

இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள்‌, வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌, உணவகங்கள்‌ போன்றவை செயல்பட அனுமதி இல்லை. எனினும்‌, இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும்‌ அத்தியாவசியச்‌ செயல்பாடுகள்‌ மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

மாநிலத்திற்குள்‌ பொது மற்றும்‌ தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்‌ மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார்‌ பேருந்து சேவைகள் (பயணத்தின்‌ போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, உடல்‌ வெப்ப நிலையை பரிசோதனை செய்தல்‌, கூட்ட நெரிசலைத்‌ தவிர்த்தல்‌ ஆகியவற்றை தவறாமல்‌ பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌. ஒட்டுநர்‌ மற்றும்‌ நடத்துநர்‌ இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

அத்தியாவசியப்‌ பணிகளான பால்‌ விநியோகம்‌, தினசரி பத்திரிக்கை விநியோகம்‌, மருத்துவமனைகள்‌, மருத்துவ பரிசோதனைக்‌ கூடங்கள்‌, மருந்தகங்கள்‌, ஆம்புலன்ஸ்‌ மற்றும்‌ அமரர்‌ ஊர்தி சேவைகள்‌ போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்‌, 14 மையங்கள்‌, சரக்கு வாகனங்கள்‌ மற்றும்‌ எரிபொருள்‌ வாகனங்கள்‌ இரவு நேரத்திலும்‌ அனுமதிக்கப்படும்‌.

பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ பங்குகள்‌ 24 மணி நேரமும்‌ தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌. உற்பத்தி தொழிற்சாலைகள்‌, தகவல்‌ தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள்‌ செயல்பட அணுமதிக்கப்படும்‌. பணிக்கு செல்லும்‌ பணியாளர்கள்‌ தொடர்புடைய நிறுவனங்களால்‌ வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்‌. இருப்பினும்‌ தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்களின்‌ பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஞாயிறு ஊரடங்கு

வரும்‌ 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில்‌ முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்‌. இருப்பினும்‌ அத்தியாவசியப்‌ பணிகளான மருத்துவப்‌ பணிகள்‌, மருந்தகங்கள்‌, பால்‌ விநியோகம்‌, சரக்கு வாகனப்‌ போக்குவரத்து மற்றும்‌ பெட்ரோல்‌ டீசல்‌ பங்குகள்‌ போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்‌.
பொதுப்‌ போக்குவரத்து மற்றும்‌ மெட்ரோ ரயில்‌ ஆகியவை இயங்காது.

9-1-2022 அன்று முழு ஊரடங்கின்‌ போது, உணவகங்களில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 7.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. உணவு டெலிவரி செய்யும்‌ மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்சொன்ன நேரத்தில்‌ மட்டும்‌ செய்லபட அனுமதிக்கப்படும்‌. இதர மின்‌ வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

9-1-2022 மற்றும்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரை விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்துகளில்‌ பயணிப்பதற்காக விமானம்‌, இரயில்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும்‌ வாடகை வாகனங்களை பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதிக்கப்படும்‌. அவ்வாறு பயணிக்கும்‌ போது, பயணச்சீட்டு வைத்து கொள்ள வேண்டும்‌.

இதர கட்டுப்பாடுகள்‌

1) மழலையர்‌ காப்பகங்கள்‌ தவிர, மழலையர்‌ விளையாட்டுப்‌ பள்ளிகள்‌, நர்சரிப்‌ பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை.

2) அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌, 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 9ஆம்‌ வகுப்பு வரை நேரடி வகுப்புகள்‌ நடத்தத்‌ தடை விதிக்கப்படுகிறது.

3) பொதுத்‌ தேர்வுக்குச்‌ செல்லும்‌ மாணவர்‌ கல்வி மற்றும்‌ எதிர்கால நலன்‌ மற்றும்‌ தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்‌ நடைபெறும்‌.

4) அரசு, தனியார்‌ மருத்துவ மற்றும்‌ துணை மருத்துவக்‌ கல்லூரிகள்‌ தவிர அனைத்துக்‌ கல்லூரிகள்‌, தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ தேர்வு எழுதும்‌ பொருட்டு ஜனவரி 20ஆம்‌ தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

5) பயிற்சி நிலையங்கள்‌ செயல்படத்‌ தடை விதிக்கப்படுகிறது.

6) பொருட்காட்சிகள்‌ மற்றும்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

7) பொது பேருந்துகள்‌ மற்றும்‌ புறநகர்‌ இரயில்களில்‌ உள்ள இருக்கைகளில்‌, 50% மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

8) மெட்ரோ இரயிலில்‌ 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

9) அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் நடைபெறும் பொங்கல்‌ மற்றும்‌ கலை விழாக்கள்‌
ஒத்திவைக்கப்படுகிறது.

10) அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள்‌ செயல்படத்‌ தடை விதிக்கப்படுகிறது.

11) அனைத்து கடற்கரைகளிலும்‌ பொதுமக்கள்‌ நடைப்‌ பயிற்சி மேற்கொள்ள மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

12) அனைத்து வழிபாட்டுத்‌ தலங்களிலும்‌ வெள்ளி, சனி மற்றும்‌ ஞாயிறு ஆகிய நாட்களில்‌ பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

13) சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்‌.

14) மீன்‌ மற்றும்‌ காய்கறிச்‌ சந்தைகளில்‌ குறிப்பாக வார இறுதி நாட்களில்‌ பொதுமக்கள்‌ கூட்டம்‌ கூடுவதைத்‌ தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்‌ மீன்‌ மற்றும்‌ காய்கறி சந்தைகள்‌ அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

15) தற்போது செயல்பட்டு வரும்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும்‌ பேருந்துகளை மண்டலம்‌ வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத்‌ துறை மற்றும்‌ சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

16) கடைகள்‌, வணிக நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌, வணிக வளாகங்கள்‌, திரையரங்குகள்‌, அனைத்து சேவைத்‌ துறைகள்‌ போன்ற பொது மக்கள்‌ செல்லும்‌ இடங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌, உரிமையாளர்கள்‌ அனைவரும்‌ இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம்‌ செலுத்தியிருக்க வேண்டும்‌.

17) அரசு மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பணியாளர்கள்‌ 9.1.2022-க்குள்‌ கட்டாயம்‌ தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

18) ஊரடங்கு காலத்தில்‌ தொழிற்சாலைகளில்‌ பணிபுரிபவர்கள்‌ இரவு நேரப்‌ பணிக்குச்‌ செல்லும்போது தங்கள்‌ அலுவலக அடையாள அட்டை மற்றும்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டமைக்கான
சான்றிதழையும்‌ வைத்துக்கொள்ளவேண்டும்‌.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும்‌ செயல்பாடுகள்‌ ஊரடங்கு கட்டுப்பாட்டிற்குட்பட்டு அனுமதிக்கப்படும்‌.

1) உணவகங்கள்‌, விடுதிகள்‌, அடுமணைகள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ மற்றும்‌ உறைவிடங்களில்‌ 50% வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌.

2) திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 100 நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

3) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌ 50 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

4) துணிக்கடைகள்‌ மற்றும்‌ நகைக் கடைகளில்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல்‌ செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

5) கேளிக்கை விடுதிகளில்‌ (01ம்‌6) உள்ள உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌, விளையாட்டுக்கள்‌, உணவகங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

6) உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ யோகா பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

7) அனைத்து திரையரங்குகளிலும்‌ அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

8) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

9) உள்‌ விளையாட்டு அரங்குகளில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி பயிற்சியும்‌, 50% பார்வையாளர்களுடன்‌ விளையாட்டு போட்டிகள்‌ நடத்தவும்‌ அனுமதிக்கப்படும்‌.

10) அனைத்து உள்‌ அரங்குகளில்‌ நடத்தப்படும்‌ கருத்தரங்கங்கள்‌, இசை, நாடகம்‌ போன்ற நிகழ்ச்சிகள்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி நடத்த அணுமதிக்கப்படும்‌.

11) அழகு நிலையங்கள்‌, சஜூன்கள்‌ போன்றவை ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அணுமதிக்கப்படும்‌.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory