» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

வெள்ளி 24, ஜூன் 2022 11:19:21 AM (IST)

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திர நாத், வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் நேற்று இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை, பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தீர்வுகாண தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

டெல்லி புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும்போது, "குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதற்காக டெல்லி செல்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "அதிமுகவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு, கட்சி தலைமைப் பதவியை மாற்றம் செய்வதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இதற்காக வரும் ஜூலை 11-ம் தேதி சட்ட விரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்காக முறையான அனுமதி எதுவும் இதுவரை பெறவில்லை. எனவே 11-ம் தேதி கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேலும் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சியின் தலைமைப் பதவியை மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேல் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory