» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)
தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச் சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றதுமான செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. ‘விதியே! விதியே! என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச் சாதியை?’ எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, தாய்த் தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகள் கண்டு மனம் வெதும்புகிறேன்.தங்களை ஏதிலிகளென இந்தியச்சட்டத்தின்படி பதிவுசெய்துள்ள ஈழச் சொந்தங்களையும் சட்ட விரோதமாகக் குடியேறியவர் களெனக் கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக் கூடங்களில் அந்நிய நாட்டவர்களோடு அடைத்து வைத்துள்ள அநீதிக்கெதிராக, தங்களை விடுவிக்கக்கோரி 35 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப் போராட்டம் செய்து அரசு மனமிறங்காத நிலையிலேயே, ஆற்றாமையும், விரக்தியும் தாளாது இத்தகையக் கொடிய முடிவை ஈழச்சொந்தங்கள் எடுத்துள்ளனர் என்பது ஏற்கவே முடியாதப் பெருந்துயரமாகும்.
இந்நாட்டுக்குத் துளியும் தொடர்பற்ற திபெத்தியர்கள் ஏதிலிகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும், பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பெற்று, பெரும் மதிப்போடு நடத்தப்படும் வேளையில், இந்நாட்டில் வாழும் எட்டுக்கோடி தமிழ்ச் சொந்தங்களின் தொப்புள்கொடி உறவான ஈழச் சொந்தங்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதும், அடிப்படை மானுட உரிமைகளும், அத்தியாவசிய இருப்பு நடவடிக்கைகளும்கூட அளிக்கப்படாது மறுக்கப்படுவதும் தமிழினத்திற்கு இந்நாட்டு அரசுகள் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழகத்திலேயே ஈழச் சொந்தங்கள் நாதியற்றவர்கள் போல நாளும் நடத்தப்படுவதும், அவர்களது உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாது அவமதிக்கப்படுவதும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெரும் அவமானமாகும்.
தேர்தலுக்கு முன்பு, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்த மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஏதிலிகளாகக்கூட அவர்களை வாழவிடாது வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா? ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ என மேடையில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இப்போது இரத்தம் வற்றிப்போகிற அளவுக்கு அவர்கள் பட்டினிக்கிடந்து, உடல்மெலிந்து கோரிக்கை வைத்தும் செவிமடுக்காதது ஏன்? அவர்களுக்கு வாக்கில்லை என்பதால், அவர்களது வறண்ட நாக்குகள் இடுகிற முழக்கங்கள் உங்கள் செவிப்பறைக்கு எட்டவில்லையா முதல்வரே? உயிரை முன்னிறுத்தி, போராட்டம் செய்தும் உங்கள் இதயக் கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? இதுதான் நீங்கள் விடியல் தரும் இலட்சணமா? வெட்கக்கேடு! பேரவலம்!
ஆகவே, இந்தியச்சட்டநெறிமுறைகளின்படி, தங்களை ஏதிலிகளாகப் பதிவுசெய்தும் சட்டவிரோதக் குடியேறியவர்களெனக் கூறி, திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச் சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு!
சனி 28, மார்ச் 2026 5:46:11 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!
சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி: வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு!
சனி 28, மார்ச் 2026 5:27:45 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST)

பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் நேரில் புகார்!
சனி 28, மார்ச் 2026 3:59:14 PM (IST)

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் முழு விவரம் வெளியீடு
சனி 28, மார்ச் 2026 3:44:51 PM (IST)


JOYESJun 26, 2022 - 01:54:34 PM | Posted IP 162.1*****