» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்: விரைவில் அமலாகும் என அரசு அறிவிப்பு

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 12:50:27 PM (IST)

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கடந்த ஆக.29-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 10-ம் தேதி அறிவித்தபடி, இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து அரசுக்கு அறிவுரை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை முதல்வரிடம் கடந்த ஜூன் 27-ம் தேதி சமர்ப்பித்தது.

பிறகு, மாணவர்களிடம் இணையதள விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பள்ளிக்கல்வித் துறை நடத்திய கணக்கெடுப்பு, மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள், கருத்து பகிர்வோரிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், சட்டத் துறை ஆலோசனையுடன் ஒரு வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆக.28-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. 

அப்போது கூறியபடி, மேலும் மெருகூட்டப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட முழு வடிவிலான அவசர சட்டம் தற்போதுஅமைச்சரவை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory