» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா : பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திங்கள் 6, பிப்ரவரி 2023 7:38:37 AM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழா கோலாகலமாக  நடந்தது. பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி இருமுடி விழா கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கியது அன்றிலிருந்து பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை மொத்தம் 44 நாட்கள் இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு சக்தி மாலை அணிந்து மூன்று அல்லது ஐந்து தினங்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு மேல்மருவத்தூர் வந்து சித்தர் பீடத்தில் உள்ள கருவறை முன்பாக அமைக்கப்பட்டிருந்த சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தினர். 

இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச தினமான நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நேற்று விடியற்காலை மூன்று மணி அளவில் மங்கல இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சியையொட்டி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகலாலும் மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன

தொடர்ந்து காலை 8:30 மணிக்கு சித்தர்பீடம் எழுந்தருளிய ஆன்மிக குரு அடிகளார் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பாத பூஜை செய்து வரவேற்பளித்தனர். மாலை 4 மணி அளவில் இயற்கை வளம் பெறவும் மனித குலம் நலமுடனும்,வளமுடனும் வாழவும் வேண்டி கலச,விளக்கு, வேள்வி பூசை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இரவு 8 மணிக்கு திண்டுக்கல் அங்கிங்கு இசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச ஜோதி விழாவன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற அன்னதானத்தை ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார். தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஆதிபராசக்தி விளையாட்டு வளாகம் செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இவ்வளாகத்தில் மாலை 4 மணிக்கு தேனிசைத் தென்றல் தேவா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 4.15 மணிக்கு தைப்பூச குரு ஜோதி ஏற்றும் விழா துவங்கியது. குருஜோதி ஏற்றும் நிகழ்ச்சிகள் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்களின் இல்லத்தின் முன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோபூஜை நடைபெற்றது. பின் குருஜோதியை இலட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தைப்பூச ஜோதி ஊர்வலத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த ஊர்வலத்தில் ஐந்து பெண்கள் குரு ஜோதியை வேப்பிலை சங்கிலியால் இணைத்து எடுத்து வந்தனர். இதில் நாதஸ்வர இசையுடன் பொய்க்கால் குதிரை ,நையாண்டி மேளம் போன்ற பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் அணிவகுக்க ஜோதி ஏற்றப்படும் வளாகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. இதில் சிங்கப்பூர், மலேசியா, குவைத் துபாய், உள்ளிட்ட நாடு, மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரதான ஜோதி கலசப்பீடத்தை சுற்றி பஞ்ச பூதங்களை குறிக்கின்ற வகையில் ஐந்து பானைகளில் இருந்து நீர் வழிந்து ஓடும் வகையிலும்,அந்தப் பானைகளின் மீது பஞ்சஜோதிகள் அமைக்கப்பட்டிருந்தது.அதன் மீது ஏகஜோதிக்கு நாகப்பாம்பு படம் எடுக்கும் வகையில் கலசபபீடம் பொருத்தப்பட்டிருந்தது. மாலை 6.15 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வருகை தந்த போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ஜோதி தளத்தையும், ஜோதி மேடையையும் பார்வையிட்டதும்,ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஆதிபராசக்தி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்று நடத்திய கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தைப்பூச ஜோதி ஏற்றப்படும் ஐந்து முக அமைப்பு கொண்ட ஜோதி கலசத்திற்கு பெண்கள் உலக நன்மை வேண்டி பூஜைகள் செய்து பின்னர் ஜோதி கலசத்திற்கு பல்வேறு முறையில் திருஷ்டி கழித்தனர்.

தொடர்ந்து சுமார் மாலை 7.10 மணிக்கு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அவர்கள் ஜோதிக்கு கற்பூரதீபாராதனை செய்தார். பின்னர் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களால் ஜோதி ஏற்றப்பட்டது.பின்னர் ஆன்மிக குரு அங்கு குழுமி இருந்த செவ்வாடை பக்தர்களுக்கு அருள் தரிசனம் வழங்கினார்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஜோதி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரமேஷ் வழக்கறிஞர் அகத்தியன் மருத்துவர் ஸ்ரீலேகா செந்தில்குமார் , வழக்கறிஞர் அகத்தியன் மற்றும் அடவகேட் ஜெனரல் பி.குமரேசன் உட்பட பலர் கனத்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்களும், சக்தி பீடங்களும், மன்றங்களும் செவ்வனே செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory