» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் புதிய இருப்புபாதை திட்டங்கள்: ரயில்வே பட்ஜெட் நிதி ஒதுக்கீடு விபரம்

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 10:00:49 AM (IST)

தமிழகத்தில் சுமார் 5000 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து சர்வே செய்யப்பட்டுள்ளது. 

தற்போது நடந்துவரும் ரயில்வே திட்டங்களை புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல், மீட்டர்கேஜ் வழித்தடங்களை அகல பாதைகளாக மாற்றம் செய்தல், ரயில் வழித்தடங்களை இருவழிப் பாதையாக மாற்றுதல், மின்மயமாக்கல், முனைய வசதிகளை அதிகரித்தல், தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் கூடுதல் வசதிகள் செய்து விரிவாக்கம் செய்தல், புதிய ரயில் தொழிற்சாலைகள் அமைத்தல் என்ற பல்வேறு வகையாக வகைப்படுத்தலாம். இந்தியா முழுவதும் 189 திட்டங்களாக 21,343 கி.மீ நீளத்துக்கு புதிய இருப்புபாதை திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு  வருகின்றது. 

இதில் கடந்த 2020-ம் ஆண்டு கணக்கு படி 2633 கி.மீ பாதைகள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு மீதமுள்ள 18,710 கி.மீ தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.  தமிழ்நாட்டு மக்கள் தொகை மற்றும் பரப்பளவுவை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின்  1,30,058   பரப்பளவுக்கு  3850 கி.மீ  வழித்தடங்கள் மிகவும் குறைவு ஆகும். தமிழ்நாட்டில் தற்போது புதிய இருப்புபாதைகள் திட்டங்கள் 10 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பத்து திட்டங்களின் மொத்த தூரம் 871 கி.மீ தூரம் ஆகும். 

இந்த மொத்த திட்டத்த்தின் மதிப்பீடு சுமார் 11,988 கோடிகள் ஆகும். இதில் புதிய இருப்புபாதை திட்டங்களுக்கு என மொத்தம் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுமார் 1057 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில 2014 முதல் இதுவரை கடந்த எட்டு ஆண்டுகளாக இரண்டு புதிய இருப்புபாதை திட்டங்களுக்கு அதாவது 36+17.2 என மொத்தம் 53.2 கி.மீ தூரத்துக்கு மட்டுமே புதிய இருப்புபாதை பாதை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு திட்டங்களையும் 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் 2025 முதல் 2030-ம் ஆண்டுக்குள் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வேண்டும் என்று 5094 கி.மீ தூரத்துக்கு உள்ள 39 புதிய இருப்புபாதை திட்டங்களை அடையாளம் கண்டு பணிகளை செய்து வருகின்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு திட்டம் கூட இல்லை. அப்படியேன்றால் தற்போது தமிழ்நாட்டில் நடந்து வரும் திட்டங்களில் ஒரு திட்டத்தையும் 2030 ஆண்டுக்குள் முடிக்கும் திட்டம் இல்லை என்பது தெளிவாக புலனாகின்றது.

புதிய இருப்புபாதைகள்:-

தமிழகத்தில் சுமார் 5000 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து சர்வே செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு எந்த ஒரு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முன்பு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் மிக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ளதை காட்டிலும் புதிய ரயில்வே இருப்புபாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.  இந்த நிலையில் மீண்டும் புதிய இருப்புபாதைகள் அமைக்க கோரிக்கை விடுத்தால் எந்த ஒரு திட்டத்தையும் புதிதாக செயல்படுத்தும் எண்ணம் ரயில்வேத்துறைக்கு இல்லை.

மக்கள்தொகை அடர்த்தியை போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழ்நாடு அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பொரிய மாநிலம் ஆகும். இந்த ரயில்அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புபாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாடு தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. இதை படிபடியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட  முன்னில் உள்ளன. 

தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளன. வரிவருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளதை போன்று ரயில்அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்நாடு  வளாச்சி பாதையில் செல்லும்.

1. திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை புதிய யில்வழித்தடம்:-

திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரயில்வழித்தடம் 70கி.மீ தூரத்துக்கு அமைக்க 227 கோடிகள் திட்டத்துடன் 2006-07 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான ரயில் திட்டத்திற்கு செஞ்சியில் கடந்த 2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. துவக்கத்தில் 77.33 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கவும், 197 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தவும் 227 கோடி ரூபாய் என திட்ட மிடப்பட்டது. மூன்று ஆண்டுகளில் இப்பணிகளை முடிக்க உத்தேசித்திருந்தனர். இந்த திட்டத்தின அப்போதைய மொத்த திட்ட மதிப்பீடு 900 கோடிகள் ஆகும். இந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு 50 கோடிகள் ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-21 – 50 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 10 கோடிகள்
2018-19- 10 கோடிகள்
2017-18- 19 கோடிகள்

2. திண்டிவனம் -நகரி புதிய ரயில்வழித்தடம்:-

திண்டிவனத்திலிருந்து நகரிக்கு 180 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்வழித்தடம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர் மாவட்டங்கள் வழியாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் வழியாக திருப்பதியிலிருந்து 55கி.மீ தூரத்தில் உள்ள நகரிக்கு போய்சேருமாறு 582 கோடிகள் செலவில் அமைக்க 2006-07 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு 06-08-2007-ம் தேதி பழைய ராணிபேட்டை ரயில் நிலையத்தில் வைத்து அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. 

இந்த வழித்தடத்தில் வந்தவாசி, செய்யார், ஆரணி, ஆர்காடு, ராணிப்பேட்டை உட்பட 22 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 லெவல்; கிராசிங்கள், 11 மேம்பாலங்கள், 30 கீழ்பாலங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 2023-24 ம் ஆண்டு பட்ஜெட்டில் 200 கோடிகள் ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 200 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22  46 கோடிகள் (நவம்பர்)
2021-22- 1000 ரூபாய் (பெப்ரவரி)
2020-21- 1000 ரூபாய்
2019-20- 7.87 கோடிகள்
2018-19- 10 கோடிகள்
2017-18- 47 கோடிகள்

3. அத்திபட்டு – புத்தூர்

அத்திபட்டுவிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக புத்தூர்க்கு புதிய இருப்புபாதை 88.30 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்க 2008-09-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முக்கியாமாக சென்னை துறைமுகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு என திட்டம் தீட்டப்பட்டு 50சதமானம் நிதியை எண்ணூர் துறைமுக கழகமும், கப்பல்போக்குவரத்து துறையும், ரயில்வேத்துறையும் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

இந்த திட்டத்தின் அப்போதைய திட்ட மதிப்பீடு 528 கோடிகள் ஆகும். பின்னர் எண்ணூர் துறைமுககழகம் எதிர்ப்பார்த்த அளவுக்கு போதிய சரக்கு போக்குவரத்து இருக்காது என கருதி இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியது. இது மட்டுமில்லாமல் இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துவது பெரும் பிரச்சனையும், நிலத்தின் மதிப்பும் அதிகமாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தில்    எண்ணூர் துறைமுக கழகம் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை ஒப்பந்தபுள்ளியும் கோரப்படவில்லை. இந்த 2023-24 நிதி ஆண்டு இந்த திட்டத்துக்கு 50 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 50 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 2 கோடிகள்
2018-19- 6 கோடிகள்
2017-18- 5 லட்சங்கள்

4. ஈரோடு - பழநி புதிய ரயில்வழித்தடம்:-

ஈரோடிலிருந்து   சென்னிமலை, தாராபுரம, காங்கேயம் வழியாக பழநிக்கு 91.05 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க 2008-09-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 1140 கோடிகள் ஆகும். இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 50 சதமானத்தை தமிழக அரசும் இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமாக ரயில்வேத்துறைக்கு தமிழகஅரசு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துவிட்டது. தமிழக அரசு இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை கொடுக்கும் திட்டம் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த 2023-24 நிதி ஆண்டு இந்த திட்டத்துக்கு 50 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 50 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 10 லட்சங்கள்
2018-19- 10 லட்சங்கள்
2017-18- 10 லட்சங்கள்

5. சென்னை – மகாபலிபுரம் - கடலூர் துறைமுக சந்திப்பு புதிய ரயில் பாதை:-

சென்னையிலிருந்து மகாபலிபுரம், மரக்காணம்,  புதுச்சேரி வழியாக கடலூர் துறைமுக சந்திப்பு வரை 178.28 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை ரயில் பாதை அமைக்க 2008-09 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கபட்டது. இந்த திட்டம் அப்போதைய தமிழகத்தை சார்ந்த ரயில்வே இணை அமைச்சர் வேலு அவர்களின் முயற்சியால் இந்த திட்டம் அனுமதி அளிக்கப்பட்டது.  இந்த திட்டம் தற்போது சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்கு கிழக்கு கடற்கரை வழியாக சாலை கிழக்கு கடற்கரை சாலை இருப்பதை போன்று ரயில் பாதை அமைக்க திட்டமி;டப்பட்டது. இந்த திட்டம் தமிழக தலைநகர் சென்னையையும் புதுவை மாநிலத்தையும் நேரடியாக ரயில் மூலம் இணைக்கும் திட்டம் ஆகும். 

இது மட்டும் இல்லாமல் இந்த திட்டம் மூலமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து சிறிய ஊர்களிலும் கடந்து செல்வதால் இந்த பகுதிகள் அனைத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு நேரடியாக ரயில்பாதை மூலமாக இணைக்கப்படும். இந்த திட்டத்தின் அப்போதைய மதிப்பு 523.52 கோடிகள் ஆகும். இன்று வரை இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஆண்டு ரயில் பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு 50 கோடிகள் ருபாய் ஒதுக்கீடு செய்யபட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 50 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 10 லட்சங்கள்
2018-19- 101 கோடிகள்
2017-18- 10 லட்சங்கள்

6. மதுரை – தூத்துக்குடி வழி அருப்புகோட்டை 143.5 கி.மீ

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம், காரியப்பட்டி, அருப்புகோட்டை, பந்தல்குடி, புதூர்நாகலாபுரம், விளாத்திக்குளம், குளத்தூர், மீளவிட்டான் வழியாக வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்க 2011-12-ம் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.  தூத்துக்குடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்து கையாள இருப்பதால் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 2023-24 நிதி ஆண்டு இந்த திட்டத்துக்கு 114 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 -114 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 20 கோடிகள்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 30 கோடிகள்
2018-19- 20 கோடிகள்
2017-18- 100 கோடிகள்

7. ஸ்ரீபெரும்புதூரிலிருச்து ஈடுங்காட்டுகோட்டை ஆவடி வழியாக கூடவாஞ்சேரிக்கு புதிய ரயில்வழித்தடம்:-

ஸ்ரீபெரும்புதூரிலிருச்து ஈடுங்காட்டுகோட்டை ஆவடி வழியாக கூடவாஞ்சேரிக்கு 60 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில்வழித்தடம் 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்த 2023-24 நிதி ஆண்டு 57 கோடியே 99 லட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 57.99 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 10 லட்சங்கள்
2019-20- 20 லட்சங்கள்
201-19- 50 லட்சங்கள்
2017-18- 10 லட்சங்கள்
 
8. மொரப்பூர்  - தர்மபுரி-

மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு பழைய பாதையை மீண்டும் கொண்டு வரவேண்டி 36 கி.மீ அகலபாதை அமைக்க 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தான் பிஜேபி ஆட்சியில் அமைந்த 2014க்கு பிறகு தமிழ்நாட்டில் முதலில் அறிவித்த புதிய இருப்புபாதை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு 360கோடிகள் ஆகும். இந்த 2023-24 நிதி ஆண்டு இந்த திட்டத்துக்கு 100 கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:

2023-24 – 100 கோடிகள்
2022-23- 1000 ரூபாய்
2021-22- 1000 ரூபாய்
2020-21- 1000 ரூபாய்
2019-20- 10 லட்சங்கள்
2018-19- 1 கோடி
2017-18- 10 லட்சங்கள்

9. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிதாக இருப்புபாதை அமைக்க 2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்படடது. இந்த திட்டத்திற்கான மதிப்பு 208 கோடிகள் ஆகும். இந்த திட்டம் பிஜேபி ஆட்சியில் அமைந்த 2014க்கு பிறகு தமிழ்நாட்டில் அறிவித்த இரண்டாவது புதிய இருப்புபாதை திட்டம் ஆகும். இந்த பட்ஜெட்டில் 385.90 கோடிகள்  ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நிதி ஓதுக்கீடு விபரம்:
2023-24 – 385.90 கோடிகள்
2022-23- 59 கோடிகள்
2021-22- 75 கோடிகள்
2020-21- 2.70 கோடிகள்
2019-20- 1000 ரூபாய்


10. காரைக்கால் துறைமுகம் புதிய இருப்புபாதை:

காரைக்காலிருந்து திருநள்ளாறு வழியாக பேரளத்துக்கு முன்பு இருந்த 23 கி.மீ மீட்டர் கேஜ் ரயில்பாதை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு பாதை நிரந்தரமாக மூடப்பட்டது. பின்னர் தற்போது இந்த பாதையை மீண்டும் புதிய அகலபாதையாக அமைக்க திருச்சி – காரைக்கால் அகலபாதை திட்டதின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. 

காரைக்கால் துறைதுறைமுகத்திலிருந்து காரைக்கால் - பேரளம் பாதைக்கு இணைப்பு பாதை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த 2023-24 நிதி ஆண்டு இந்த திட்டத்துக்கு 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு 10000 ருபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

11. பெங்களுர் - சத்தியமங்கலம் ரயில்வழித்தடம்:-

பெங்களுரிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் வழியாக தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை புதிய இருப்புபாதை அமைக்க தென்மேற்கு மண்டலம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.  சத்தியமங்கலத்திலிருந்து பெங்களுருக்கு 260கி.மீ தூரத்துக்கு 901 கோடிகள் செலவில் புதிய ரயில்வழித்தடம் அமைக்க 1996-97-ம் ஆண்டு ரயில்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வனவிலங்குகள் வசிக்கும் பகுதி வழியாக செல்வதால் சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டிஉள்ளது. 

தமிழக அரசு சத்தியமங்கலம் வனபகுதியில் சர்வே பணிகளுக்கு அனுமதி மறுத்ததின் காரணமாக பெங்களுர் முதல் சாம்ராஜ்நகர் வரை பாதை அமைக்க கர்நாடகா அனுமதி அளித்து 50 சதமானம் நிதியும் கொடுத்து தேவையான நிலத்தையும் இலவசமாக கொடுத்துள்ளது.  இந்த திட்டம் தமிழக கர்நாடக வனபகுதிகள் வழியாக அமைக்கப்படுவதால் பல்வேறு சுற்றுசுழுல் அமைப்பினரால் பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது. வனத்துறை வழியாக இயக்கப்படுவதால் இந்த திட்டம் செயல்படுத்தாமல் கைவிட்டுவிட ரயில்வேதுறை யோசித்துவருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory