» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம்: 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:47:45 PM (IST)

புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்,  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அண்மையில் சிலர் மனிதக் கழிவுகளை கலந்ததாக பரபரப்பு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

காவல் துறையினரும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றதையடுத்து, சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினரின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.

வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் வேங்கைவயலை உள்ளிட்ட முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா, மற்றும் பயிற்சி காவலர் முரளிராஜா உள்ளிட்ட 8 பேரை, சிபிசிஐடி விசாரணைக்காக காவல் துறையினர் திருச்சி அழைத்திருந்தனர்.

இதனையடுத்து, திருச்சி மத்திய சிறை அருகே உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அனைவரும் செவ்வாய்கிழமை வந்தனர். அவர்களிடம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பால்பாண்டி தலைமையிலான காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், விரைவில், தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படுவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory