» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்பு!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:35:12 PM (IST)

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்றார். முன்னதாக அவர் பதவி ஏற்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் விக்டோரியா கவுரி பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, அவரை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பு மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கொண்டிருப்பதால், அரசியல் சாசன அதிகாரமிக்க நீதிபதி பதவியில் அவரை நியமிக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என கூறி இருந்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர். 

இதையடுத்து, திட்டமிட்டபடி விக்டோரியா கவுரி இன்று காலை கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதேபோல், மேலும் 4 பேர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று அவர்களை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், விக்டோரியா கவுரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 5 பேரும் பதவி ஏற்க இருந்த நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பதவி ஏற்புக்காக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டதால் திட்டமிட்டபடி விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory