» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

ஞாயிறு 4, ஜூன் 2023 4:33:51 PM (IST)

"மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால், அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 10 மாதங்களில் மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப் பட்டது. அதையேற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 

சில பிரிவினருக்கு அதிகபட்சமாக 52% வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் நுகர்வோர் விலைக்குறியீடு உயர்வின் அடிப்படையில் 2026 மற்றும் 2027ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தது. அதைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது செயல்படுத்தத் துடிக்கிறது.

நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தின் நுகர்வோர் விலைக்குறியீடு, அதாவது பணவீக்கத்தின் அளவு அல்லது 6%, ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம் 4.70% என்பதாலும், அது 6 விழுக்காட்டை விட குறைவு என்பதாலும் அடுத்த மாதம் முதல் 4.70% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து விட்டது என்பதற்காகவே, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தால், அது சரி செய்ய முடியாத பெருந்தவறாக அமைந்து விடும். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன் உயர்த்தப்படவில்லை; 10 மாதங்களுக்கு முன்பு தான் உயர்த்தப்பட்டது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பொதுமக்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. பல குடும்பங்களில், மின்கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க பால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை சொல்லி மாளாது. மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின்கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. 

இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள். இவை அனைத்தையும் கடந்து பணவீக்கத்தின் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நடைமுறை சாத்தியமற்றது. ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசால் கூட, கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கத்திற்கு இணையாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த மே மாதம் தான் மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்கியுள்ளது. மாநில அரசாலேயே பணவீக்கத்திற்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடியாத நிலையில், பொதுமக்களால் எப்படி பணவீக்கத்திற்கு இணையாக மின்கட்டணத்தை உயர்த்தி செலுத்த முடியும்?

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் 90% மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2% கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.70% மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது. தமிழ்நாட்டின் வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை, அவற்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் தமிழக மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்னொரு சுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, 2026 மற்றும் 2027ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதிலிருந்தும் விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

மின்Jun 4, 2023 - 08:35:53 PM | Posted IP 162.1*****

கட்டண உயர்வு வருத்தம் தான்... ஆனால் eb நஷ்டத்தில் இயங்கி வருகிறது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory