» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: 18 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:21:55 PM (IST)
வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது. பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் விவசாயம் மற்றும் வனத்தை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வாச்சாத்தி கிராமப் பகுதிகளில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி சந்தன மரம் வெட்டிக் கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாகக்கூறி 155 வனத்துறையினர், 108 போலீசார், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய கூட்டுக்குழுவினர் சோதனையிட்டனர்.வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த சில வீடுகள் மற்றும் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அங்கிருந்த 90 பெண்கள் உள்பட 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கையின்போது கிராம மக்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 18 மலைவாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளராக இருந்த சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு பின்னரே வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும் உரிய விசாரணை ஏதும் நடைபெறவில்லை எனக்கோரி வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 1995-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தமாக 269 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 1996-ல் சி.பி.ஐ. கோவை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவை மற்றும் கிருஷ்ணகிரி கோர்ட்டுகளில் வழக்கு நடத்தப்பட்டு, 2008-ல் தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த தர்மபுரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.
அதில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டிலேயே ஒரு வழக்கில் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட வழக்காக இது இருந்ததால் நாடு முழுவதும் பெரும் அதிர்வை இந்த தீர்ப்பு ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தண்டனையை எதிர்த்து குற்றம் சட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
தொடர்ந்து இவ்வழக்கு சம்பந்தமான இடங்கள் மற்றும் மக்களிடையே நேரில் விசாரணை செய்யவும் முடிவு செய்து அதன்படி கடந்த மார்ச் 4-ந்தேதி வாச்சாத்தி கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் சென்றார்.
சம்பவத்தில் தொடர்புடைய பகுதிகளாக கருதப்படும் பழங்குடிகள் தொடக்கப்பள்ளி, ஏரிப்பகுதி, ஆலமரம், தண்ணீர் தொட்டி, மலைப்பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 2011 செப்டம்பர் 29-ந்தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சரியாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் அதே தேதியான இன்று (29-ந்தேதி) மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி வேல்முருகன் வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு: குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 174-வது குற்றவாளி மரணம் அடைந்து இருப்பதால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுகிறார்.
பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த கிராமத்தை முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். வாச்சாத்தி கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையில் 50 சதவீதத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் இருந்து பெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டப்பட்டது உறுதியாகி இருக்கிறது. எனவே மருத்துவ சிகிச்சை அளிக்க தவறியவர்களிடம் இருந்தும் இழப்பீடு தொகை பெறப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில் சுயதொழிலுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
வாச்சாத்தி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதைய கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட வன அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே ஜெயில் தண்டனை அனுபவித்து இருந்தால் அதற்கேற்ப மீதமுள்ள காலத்துக்கும் தண்டனை அனுபவிக்க வகை செய்ய வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 பேர் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 5 பேர் 7 ஆண்டுகளும், மற்றவர்கள் 1 முதல் 3 ஆண்டுகளும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று இன்றைய தீர்ப்பு மூலம் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
