» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வட மாநில நபர் கைது
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 8:21:50 AM (IST)
தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வட மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதியதுறைமுகம் அருகே உள்ள உலக வர்த்தக மையம் பகுதியில் தனியார் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியின் அருகில் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்றார். ஆனால் அதனை உடைக்க முடியாததால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரி கார்த்திகேயன் (38) தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அதன் மூலம் திருட முயன்றவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மராட்டிய மாநிலம் தேடு மாவட்டம், வஸ்டுவால் பகுதியை சேர்ந்த ரியாத் (50) என்பவரை கைது செய்தனர்.