» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 8:29:05 AM (IST)
நாகர்கோவிலில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி (50) என்பவர் ஓவிய கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக கீழ ராமன்புதூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார்.
இவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதாவது ஆசிரியர் ராமசந்திர சோனி தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டை கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகிகள் உடனடியாக இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மாணவியுடன் பயிலும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அந்த ஆசிரியர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்ய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராமசந்திர சோனியை அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் தவறு எதுவும் செய்யவில்லை என்றும், மாணவியிடம் சகஜமாக பழகியதாகவும் கூறினார். எனவே சம்பந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் ராமசந்திர சோனி தன் கையை தொட்டும், இழுத்தும் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கூறினார்.
இதைத் தொடர்ந்து ராமசந்திர சோனி மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஆசிரியர் ராமசந்திர சோனி வேறு மாணவிகளிடம் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் ராமசந்திர சோனி மீது புகார் கூறியதாக கூறப்படுகிறது. எனவே இந்த புகார்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.