» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 6 இடங்களில் விநாயகர் சிலை அமைக்க அனுமதி: ஆட்சியர் தகவல்!

வியாழன் 29, ஆகஸ்ட் 2024 10:25:19 AM (IST)



விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது, சிலைகள் கரைப்பது, அதன் பொருட்டு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குத்துறை கடற்கரை, பள்ளிக்கொண்டான் அணைக்கட்டு, வெட்டுமடை கடற்கரை, மிடாலம் கடற்கரை, தேங்காப்பட்டணம் கடற்கரை, திற்பரப்பு ஆறு, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர்கள் சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில் (படிவம்-1) தொடர்புடைய கோட்டாட்சியர்களுக்கு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் மாநகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடமும் தனியார் இடமாக இருந்தால் நிலஉரிமையாளரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளது என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். சிலை கரைக்கப்படும் 10 இடங்களிலும் போதிய தீயணைப்பு மீட்பு பணி அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதை மாவட்ட தீயணைப்பு அலுவலர் உறுதி செய்திட வேண்டும். தற்காலிக மின் இணைப்பு மற்றும் வழங்கப்படுவதற்கான ஆதாரம் குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெற வேண்டும்.

சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும். தற்காலிக விநாயகர் சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலைவர்களின் விளம்பர பதாகைகள் கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலை வைக்கப்படுகின்ற இடத்தில் 24 மணி நேரமும் தொடர்புடைய அமைப்பைச் சார்ந்த 2 தன்னார்வலர்கள் பாதுகாப்புக்காக இருக்க அந்தந்த அமைப்பு நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். 

மேலும் போதிய மின்விளக்குகள், ஜெனரேட்டர் வசதி செய்யப்படவேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி, டிராக்டர் மட்டுமே சிலைகளை கரைக்க கொண்டு செல்லப் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் (நண்பகல் 12.00 மணிக்கு முன்பு) கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் (மாலை 6.00 மணிக்குள்) அனைத்து சிலைகளும் (விஜர்சனம்) கரைக்கப்பட வேண்டும்.

ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று கூம்பு வடிவ ஒலிபெருக்கி அல்லாத பெட்டி வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் பெட்டி வடிவ ஒலிபெருக்கிகள் 1ற்கு மேல் வைக்கக்கூடாது. மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் குறிப்பிட்ட டெசிபல் அளவிற்குட்பட்ட பாக்ஸ் வடிவ ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ, சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிலை வைக்கப்படுகின்ற பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கூரை அமைப்பதைத் தவிர்க்கப்படவேண்டும்.

பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த்துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-இல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் வாகனத்தில் செல்லும் நபர்கள் போதிய இடைவெளியில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கென அரசின் புதிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வரும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

சிலை வைக்கும் இடங்கள் குறித்த பட்டியலை 02.09.2024-க்கு முன்பு தொடர்புடைய காவல் நிலையத்திலும் பத்மனாபபுரம் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரிடமும் தொடர்புடைய விழா அமைப்பினர் ஒப்படைத்திருக்க வேண்டும். சிலை கரைப்பு நடைபெறும் பகுதிகளில் தேங்கும் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகள், பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்படவேண்டும். 

சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், அதில் விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களை முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்க வேண்டும். ஊர்வலம் தொடங்கும் இடத்திலும், விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பத்து இடங்களிலும் மின்வாரிய உதவிபொறியாளர்கள் 2 பேர் வீதம் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். 

மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் வைப்பதற்கான பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய மற்றும் நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். 

சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின் தன்மைகளை ஆராய்ந்து அவை மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்குட்பட்டிருப்பதை தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர் சிலைகளிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட அலங்கார பொருட்களை அந்தந்த நீர்நிலை பகுதிகளில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரால் சேகரித்திட வேண்டும்.

மேலும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பிரச்சனைக்குரிய இடங்கள், மருத்துவமனைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் நிலை அமைத்தல் கூடாது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பக்தி பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு நல்குமாறும், அமைதியுடன் விநாயகர் சிலை ஊர்வலத்தினை நடத்திட அனைத்து தரப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.

கலந்தாலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி (நாகர்கோவில்), தமிழரசி (பத்மநாபபுரம்), உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா, கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.பிரியா, துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், தீயணைப்பு துறையினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory