» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா எச்சரிக்கை!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 3:25:01 PM (IST)
சூறாவளி காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் ஆட்சியர் ஆர்.அழகுமீனா, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கும் 30.08.2024 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என தேசிய வானிலை ஆராய்ச்சி மையம், அகமதாபாத் வானிலை எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. (https://mausam.imd.gov.in/ahmedabad/)
மேலும், மேற்கண்ட கடற்பகுதிகளில் 29.08.2024 முதல் 31.08.2024 சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், கேரளா-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.