» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் மாநகரில் குற்றங்களை தடுக்க 53 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:28:00 AM (IST)
நாகா்கோவில் மாநகரில் குற்றங்களை தடுக்க 53 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் மாநகரில் குற்றங்கள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் மாநகரின் 3-வது கண்ணாக முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், கோர்ட்டு ரோடு, மணிமேடை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்தும், செயல்படாமலும் இருந்தன.
இந்நிலையில் தற்போது அவற்றை மாற்றிவிட்டு புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. வடசேரி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மொத்தம் 23 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதற்கான கட்டுப்பாட்டு அறையானது பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் உள்ளது. அண்ணா பஸ் நிலையத்தை சுற்றி 16 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு ரோட்டில் 8 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதனை எஸ்.எல்.பி. பள்ளி முன்புறமுள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல மணிமேடை சந்திப்பை சுற்றி 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, எஸ்பி அலுவலக சாலை, வேப்பமூடு சந்திப்பு, கோர்ட்டு ரோடு ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட மணிமேடை சந்திப்பில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. நாகர்கோவில் மாநகரில் மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் இருந்தபடி கண்காணிக்கவும், செல்போனில் பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 53 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பில் தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.