» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வைணவ கோவில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:45:36 AM (IST)

புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்திற்கு முதியோர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணத்திற்கு 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட ஆயிரம் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.25 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படுகிறது. இந்த ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள், மகாபலிபுரம், சயன பெருமாள், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மண்டலத்தில் காஞ்சீபுரம் தேவராஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், விளக்கொளி பெருமாள், பாண்டவதூத பெருமாள், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்கள் இடம் பெற்றுள்ளது.

விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில், வைகுண்ட பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மசாமி கோவில், பரிக்கல் லட்சுமி நரசிம்மசாமி ஆகிய கோவில்கள்.

தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களில் கும்பகோணம், சக்கரபாணி பெருமாள், சாரங்கபாணி பெருமாள், உப்பிலியப்பன், வெங்கடாசலபதி கோவில், நாச்சியார்கோவில், சீனிவாச பெருமாள் கோவில், திருச்சேறை சாரநாத பெருமாள்.

திருச்சி மண்டலத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி, உத்தமர் கோவில், புருஷோத்தம பெருமாள், அன்பில் சுந்தராஜ பெருமாள், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள், கோவிலடி அப்பகுடத்தான் கோவில். மதுரை மண்டலத்தில் அழகர் கோவில், கள்ளழகர், ஒத்தக்கடை, யோக நரசிம்ம பெருமாள், திருமோகூர், காளமேகப் பெருமாள், திருக்கோஷ்டியூர், சவுமிய நாராயணப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் பெருங்குளம் மாயக்கூத்தர், இரட்டை திருப்பதி, அரவிந்தலோசனர், கள்ளபிரான், தேவர்பிரான், இரட்டை திருப்பதி, நத்தம் விஜயாசன பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேய்ந்த பெருமாள், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர், ஆழ்வார் திருநகரி ஆதி நாத ஆழ்வார், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், கள்ளபிரான், வைகுண்ட பெருமாள் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் முதியோர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory