» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது உரிய விதிகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்

சனி 31, ஆகஸ்ட் 2024 11:56:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எனவே, பொது மக்களுக்கு பின்வருமாறு வேண்டுகோள் விடப்படுகிறது. அதாவது, களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களைப் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளைக் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், வேம்பார் ஆகிய இடங்களில் மட்டும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory