» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் 18 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
திங்கள் 2, செப்டம்பர் 2024 3:52:05 PM (IST)
மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து இருந்து ஆந்திரா செல்லக்கூடிய 18 ரயில்களை தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகின்றன. இதனால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பல ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. சில ரயில்களை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பெரும்பாலானா ரயில்கள் ஆந்திரா வழியாத்தான் கடந்து செல்ல வேண்டும்.சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரயில்களை தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்துள்ளது.
தண்ட வாளத்தில் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் ரயில்களை இயக்க முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்ட்ரல்-பூரி, அகமதாபாத்-சென்ட்ரல் நவஜீவன் எக்ஸ்பிரஸ், சென்ட்ரல்-சாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மைசூரு-ஹவுரா, ஹவுரா-மைசூரு எக்ஸ்பி ரஸ், ஐதராபாத்-தாம்பரம், சென்ட்ரல்-சாப்ரா கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், சாப்ரா-சென்ட்ரல், சென்ட்ரல்-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ் பிரஸ், டெல்லி-சென்ட்ரல் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ஐதராபாத், சென்ட்ரல்-டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொச்சுவேலி-கோர்பா எக்ஸ்பிரஸ், பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா-பெங்களூரு சேஷாத்திரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ஆகியவை 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் நேற்று முதல் ரத்து செய்யப் பட்டதால் சென்ட்ரல் நிலையத்தில் பயணிகள் பயணத்தை தொடர முடியாமல் தவிக்கின்றனர். முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் சென்ட்ரல் நிலையத்தில் தங்கி உள்ளனர்.
பயணிகளுக்காக உதவி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. சென்ட்ரல் நிலையத்தில் 044-25354995, 044-25354151 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசினால் தகவல் கிடைக்கும். இதுதவிர விஜயவாடா, ராஜ முந்திரி, ஒங்கோல், தெனாலி, நெல்லூர், கூடூர், குடிவாடா, குண்டூர், ஐதராபாத், செகந்திரபாத் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளவும் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல ஆந்திரா மார்க்கமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. 15 ரயில்கள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். அவர்களை நிலையத்திற்குள் விடாமல் முன் பகுதியிலே ரயில்வே ஊழியர்கள் தகவல்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ரயில்கள் ரத்து, தாமதம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள 'கியூ ஆர் கோடு' வசதியை சென்ட்ரல் நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்திருந்தனர். இதனை ஸ்கேன் செய்தால் ரயில்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டால் நெரிசல் ஏற்படும் எனக் கருதி முன்எச்சரிக்கையாக இந்த நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.