» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் ரயில் 25 நாட்கள் ரத்து
வெள்ளி 6, செப்டம்பர் 2024 4:10:48 PM (IST)
திருச்செந்தூர்- நெல்லை பயணிகள் 25 நாட்களுக்கு இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை சந்திப்பில் இருந்து தினமும் திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சென்னைக்கு இயக்கப்படும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கேரள மாநிலம் பாலக்காடுக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. எனவே அந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்தை ரத்து செய்ய மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வழக்கமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வரும் பயணிகள் ரயில், பணிகள் நடக்க உள்ள அந்த யார்டு பகுதியில் நிறுத்தப்படும். அதேபோல் அந்த ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு இரவில் திருச்செந்தூருக்கு சென்று, அங்கிருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரசாக சென்னைக்கு புறப்படும்.
இந்நிலையில் யார்டு பணிகள் காரணமாக காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரயிலும், மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயிலும் வருகிற 9-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 25 நாட்களுக்கு இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் நெல்லை-திருச்செந்தூர் வழித்தடங்களில் மற்ற நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.