» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:35:25 AM (IST)
சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கயத்தாறில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்.8ம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி கயத்தாறில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செ.செல்வகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ, மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசூர் காளிப்பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தங்கப் பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலர் பசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.