» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிக்கு குழந்தை பிறந்த விவகாரம் : போக்சோ வழக்கில் அண்ணன் கைது!

சனி 9, நவம்பர் 2024 5:13:46 PM (IST)

ராசிபுரம் அருகே சித்தி வீட்டில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணனை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.

தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாமக்கல் சைல்டு லைன் அலுவலர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (எ) ரங்கராஜ் (28) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (எ) ரங்கராஜ்(28). கூலி தொழிலாளியான இவரது பெரியம்மா மகளான 16 வயது மாணவி, கடந்தாண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் சேர்ந்தார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி, சித்தி அங்காயி வீட்டில் தங்கி படித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியிடம் தங்கராஜ் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பமானார்.

இதை அறிந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால், மாத்திரை கிடைக்கவில்லை. இதனிடையே 10ம் வகுப்பு படிப்பை முடித்த மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துவிட்டார். பின்னர், அங்குள்ள மகளிர் பள்ளியில் பிளஸ்1 சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு பெண் குழந்தையை மாணவி பிரசவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு தங்கராஜை கைது செய்துள்ளோம் என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory