» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அழுத்தம் கொடுத்ததா..? விஜய், ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து திருமாவளவன் விளக்கம்!

சனி 7, டிசம்பர் 2024 10:35:42 AM (IST)

"விஜய் நடத்திய அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் காரணம் இல்லை" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கரின் நூலை வெளியிட்டிருப்பதும், அவரைப் பற்றி பேசியிருப்பதும் பெருமை அளிக்கிறது. இன்றைக்கு பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் விஜய்யும் இணைந்திருப்பது வரவேற்புக்குரியது.

அந்த நிகழ்வில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அவர் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வின் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை.

அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. ஆனால், நாங்கள் பங்கேற்க போகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, அதற்கு அரசியல் சாயம் பூச சிலர் முயற்சித்தனர். அதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். ஓரளவுக்கு எங்களாலும் யூகிக்க முடியும்.

அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிவிடுவார்கள். அப்படி அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை. தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு தர நான் விரும்பவில்லை. இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. விசிக அங்கம் வகிக்கும் கூட்டணி சிதையாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் எடுத்த முடிவு. இதில் திமுக எந்த வகையிலும் தலையிடவில்லை.

‘வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனத்தின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம்” என்றார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அவரின் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்” என்றார். | > அதன் விவரம்: "கூட்டணியில் திருமாவளவனுக்கு நெருக்கடி!” - தவெக தலைவர் விஜய் ஆவேச பேச்சு

அதேபோல புத்தக வெளியீட்டு விழாவில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " "காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மனசாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டியலினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும்போது அதற்காக முதல் குரலாக ஒலித்த குரல் விஜய்யின் குரல். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலை விட்டுவிட்டு வந்துள்ளார் விஜய். ஆனால், இங்கே சிலர் சினிமாவில் ஒரு நிறுவனத்தை வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory