» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

கதர் ஆடை அணிந்து வரும் அரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்

வியாழன் 17, ஜூலை 2014 12:35:31 PM (IST)

சென்னையில் வேட்டி கலாச்சாரத்துக்கு நிகழ்ந்த அவமதிப்பை கண்டு மக்கள் கொந்தளிக்கும் நிலையில் தமிழகத்தில் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடை அணிந்து வர வேண்டும் என்ற அரசின் உத்தரவை அரசு அதிகாரிகள் மறந்து விட்டார்கள்.

கடந்த 11ம்தேதி அன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்ற கூட்ட அரங்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி  எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமனும் மற்றும் அவரோடு சில மூத்த வழக்கறிஞர்களும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மன்றத்திற்குள் செல்ல முயன்ற போது, வேட்டி அணிந்து இருந்தனர் என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த விவகாரம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழனின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வேட்டி கலாச்சாரத்துக்கு தமிழகத்திலேயே தடை விதிப்பதா என்று தமிழ் அமைப்புகளும், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனக்குரலை எழுப்பியுள்ளனர். இவ்வளவு ஏன் தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் பற்றி பேசப்பட்டது. இதுபோன்று அவமதிக்கும் செயலை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது எல்லாம் வரலாற்றில் வரவேற்க கூடிய ஒன்று தான்.

ஆனால் அதேநேரத்தில் அண்மையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இன்றளவும் கடைபிடிக்கப்படவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக ஒரேயொரு நாள் தான் கடைபிடிக்கப்பட்டது. அந்த உத்தரவு என்னவென்றால் நலிவடைந்த கைத்தறி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கதராடை தினம் ஒன்றை அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதாவது வாரத்தில் திங்கள்கிழமை தோறும் அரசு அலுவலர்கள் கதர்வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு தான்.

அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் கதராடை தினம் கடைபிடிக்கப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு வாரம் தான் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கதர் வேட்டி, சட்டை அணிந்து வரும் உத்தரவை ஒரேயொரு நாள் தான் அரசு அலுவலர்கள் கடை பிடித்தார்கள். அதன்பின்னர் அலுவலர்களும் மறந்து விட்டார்கள். அவர்களை வழிநடத்தும்  ஆட்சியரும் அதை மறந்து விட்டார். 

இப்போது திங்கள்கிழமை தோறும் அரசு அலுவலர்கள் யாராவது கதர்வேட்டி, சட்டை அணிந்து வருகிறார்களா என்று பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. சென்னையில் கிரிக்கெட் மன்றத்தில் வேட்டிக்கு அவமதிப்பு நிகழ்ந்து விட்டதே என்று கொந்தளிக்கும் நம் மக்கள் தமிழக அரசின் உத்தரவை அரசு அலுவலர்கள் மறந்து கதர்வேட்டி, சட்டை அணிவதை தவிர்த்து வருகிறார்களே. இதறகு அவர்களை எந்த சட்டத்தில் தண்டிப்பது என்பது அரசுக்கு தெரியுமா?

கதர் வேட்டி, சட்டையை ஏன் வாரத்தில் ஒருநாள் அணிந்து பணிக்கு வருவதில்லையே என்று அரசு உயர்அதிகாரிகளை கேட்டால் அதற்கு அவர்கள் அளிக்கும் பதில் ஆமாம் வேட்டியை எப்போதாவது கட்டி வரும் போது அதை அடிக்கடி அவிழ்த்து கட்டுவது எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. தமிழக அரசுக்கு இது தேவையா என்கிறார்கள்.

இது தமிழக அரசின் உத்தரவை அவமதிப்பதோடு அதை ஏளனம் செய்வதாக இருக்கிறது.. ஆக வேட்டி கலாச்சாரத்தை தமிழக அரசு ஊழியர்களே  இப்படி தவிர்த்து வருகிறார்கள் என்றால் அதை பார்த்து அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்த செய்திக்கு பிறகாவது நெல்லை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து கதர்வேட்டி, சட்டையை அரசு அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் அணிந்து வர செய்வாரா என்று பார்ப்போம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory