» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோகித், பும்ரா அசத்தல் : இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா!!

ஞாயிறு 27, ஆகஸ்ட் 2017 11:08:01 PM (IST)இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. கண்டியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் அடித்து அசத்தினார். பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட் சாய்த்தார்.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டுவென்டி-20 என நீண்ட இடைவெளிக்குப் பின் ஓரு முழுமையான தொடரில் இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்தது. இதன் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 3-0 என முழுமையாக தொடரை கைப்பற்றி சாதித்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கண்டியில் உள்ள பல்லேகெலே மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கபுகேதரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. இலங்கை அணியில் தடை காரணமாக தரங்கா, காயத்தால் அவதிப்படும் குணதிலகா இருவருக்கு பதில், சண்டிமால், திருமானே இடம் பெற்றனர்.

இலங்கை அணிக்கு டிக்வெலா, சண்டிமால் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. பும்ரா வேகத்தில் டிக்வெலா (13), மெண்டிஸ் (1) சரிந்தனர். ஆமை வேகத்தில் விளையாடிய சண்டிமாலை பாண்ட்யா வழியனுப்பினார். இவர் 71 பந்தில் 4 பவுண்டரி உட்பட 36 ரன் எடுத்தார். கேதர் ஜாதவ் சுழலில் மாத்யூஸ் (11) சிக்கினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், எழுச்சியுடன் விளையாடிய திருமானே அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 69 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் இவரது 17வது அரைசதமாக அமைந்தது.

சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், பும்ரா பந்தில் திருமானே ஆட்டமிழந்தார். இவர் 80 ரன் (105 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். முக்கிய கட்டத்தில் கேப்டன் கபுகேதரா (11) அக்சர் படேல் பந்தில் போல்டானார். பும்ரா பந்தில் தனன் ஜெயா (2) ஸ்டெம்புகள் சிதற போல்டானார். 47 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்த நிலையில், மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மழை நின்றவுடன் ஆட்டம் துவங்கிய போது பும்ரா பந்தில் ஸ்ரீவர்தனா (29) ஆட்டமிழந்தார். சமீரா (6) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். முடிவில் இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. பெர்ணான்டோ (5), மலிங்கா (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 (10-2-27-5) விக்கெட் வீழ்த்தினார். பாண்ட்யா, அக்சர் படேல், ஜாதவ் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

எளிதான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. மலிங்கா வேகத்தில் தவான் (5) கிளீன் போல்டானார். பலத்த எதிர்பார்ப்பற்கு இடையே களம் வந்த கேப்டன் கோலி (3) பெர்ணான்டோ பந்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். தனன்ஜெயா சுழலில் ராகுல் (17), கேதர் ஜாதவ் (0) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 61 ரன் எடுத்து திணறியது. இந்த நிலையில், ரோகித் சர்மாவுடன் அனுபவ் வீரர் தோனி இணைந்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 64 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு தோனி கம்பெனி கொடுக்க சரிவிலிருந்து இந்தியா மீளத் துவங்கியது. 33வது ஓவரில் இந்தியா 150 ரன் எடுத்த போது வெற்றி உறுதியானது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர் 118 பந்தில் சதம் அடித்தார். தன்பங்கிற்கு தோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது 65வது அரைசதமாகும். 44வது ஓவரில் இந்தியா 200 ரன் கடந்தது. 44வது ஓவரின் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன் எடுத்த நிலையில், இலங்கை ரசிகர்கள் அணி தோற்றதே என்ற விரக்தியில் பாட்டில்களை மைதானத்தில் வீசத் தொடங்கினர். இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

அரைமணி நேரத்திற்குப் பின் ஆட்டம் மீண்டும் துவங்கிய நிலையில், இந்தியா 45.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 124 (145 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 67 (86 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 157 ரன் சேர்த்தது. இலங்கை தரப்பில் தனன்ஜெயா 2, மலிங்கா, பெர்ணான்டோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை வகிப்பதோடு தொடரை கைப்பற்றி அசத்தியது. நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பில் வரும் 31ம் தேதி நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory