» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலி - ரோகித் சதம்.. தோனி உலக சாதனை: இந்தியாவுக்கு 4வது வெற்றி

வெள்ளி 1, செப்டம்பர் 2017 8:54:54 AM (IST)இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராத் கோலி (131), ரோகித் சர்மா (104) சதம் அடித்தனர்.  168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு ‘டுவென்டி-20’ என நீண்ட இடைவெளிக்குப் பின் ஓரு முழுமையான தொடரில் இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்தது. இதன் மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்ற இந்தியா 3-0 என முழுமையாக தொடரை கைப்பற்றி சாதித்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில், நான்காவது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேதர் ஜாதவ், சாகல், புவனேஷ்வர் குமாருக்கு பதில் குல்தீப் யாதவ், மணிஷ் பாண்டே இடம்பிடித்தனர். வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுக வாய்ப்பு பெற்றார். இலங்கை அணியில் காயம் காரணமாக கபுகேதரா விளையாடாத நிலையில், கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். புஷ்பகுமாரா, முனவீரா இருவரும் அறிமுக வாய்ப்பு பெற்றனர். டிசில்வா அணியில் சேர்க்கப்பட்டார். கபுகேதரா, சண்டிமால், சமீரா நீக்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் ஜோடி துவக்கம் தந்தது. பெர்ணான்டோ வேகத்தில் தவான் (4) ஆட்டமிழந்தார். பின், இணைந்த ரோகித், கேப்டன் கோலி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். டி சில்வா பந்துவீச்சில் கோலி இரண்டு பவுண்டரி அடித்தார். அதிரடியாக விளையாடிய கோலி 38 பந்தில் அரைசதம் அடித்தார். 14வது ஓவரின் முடிவில் இந்தியா 100 ரன் எடுத்தது. ரோகித் 45 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் மலிங்கா மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. இருவரும் தொடர்ந்து விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. 

தொடர்ந்து அசத்திய கோலி 76 பந்தில் சதம் அடிக்க இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கோஹ்லியின் 29வது சதமாக அமைந்தது. மேலும் 26வது ஓவரில் இந்தியா 200 ரன் எடுத்த போது இந்த ஆட்டத்தில் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 220 ரன் சேர்ந்த நிலையில், மலிங்கா வேகத்தில் விராத் கோலி ஆட்டமிழந்தார். இவர் 131 ரன் (96 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். கோஹ்லியின் விக்கெட் மலிங்காவுக்கு ஓருநாள் போட்டியில் 300வது விக்கெட்டாக அமைந்தது. 203வது போட்டியில் மலிங்கா இந்த சாதனையை படைத்தார். அடுத்து பாண்ட்யா களம் வந்தார். 

மலிங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 13வது சதம் கடந்தார். இவர் 85 பந்தில் சதம் அடித்தார். முக்கிய கட்டத்தில் பாண்ட்யா (19) லோகேஷ் ராகுல் (7) சொதப்பினர். மாத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா வெளியேறினார். இவர் 104 ரன் (88 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய மணிஷ் பாண்டேவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை நாலா புறமும் பறக்கச் செய்ய 43வது ஓவரில் இந்தியா 300 ரன் கடந்தது. மலிங்கா பந்தை தோனி சிக்சருக்கு பறக்கவிட்டார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் மணிஷ் பாண்டே அரை சதம் அடித்தார். முடிவில், இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 375 ரன்கள் குவித்தது. பாண்டே 50 (42 பந்து, 4 பவுண்டரி), தோனி 49 (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 101 ரன் சேர்த்தது. இந்த போட்டியில் தோனி புதிய சாதனை படைத்தார். அதாவது, ஒருநாள் போட்டி அரங்கில், அதிக முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருக்கும் வீரர்கள் பட்டியலில் தோனி (73) முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் இலங்கையின் சமிந்தா வாஸ் (72), தென் ஆப்ரிக்காவின் போலக் (72) உள்ளனர். இலங்கை தரப்பில் மாத்யூஸ் 2, மலிங்கா, பெர்ணான்டோ, தனன்ஜெயன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மலிங்கா தனது 10 ஓவரில் 82 ரன் விட்டுக் கொடுத்தார்,

கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஷர்துல் வேகத்தில் டிக்வெலா (14) சரிந்தார். மெண்டிஸ் (1) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அறிமுக வீரர் முனவீரா (11) பும்ராவிடம் வீழ்ந்தார். பாண்ட்யா பந்தில் திருமானே (18), ஸ்ரீவர்தனா (39) நடையை கட்டினர். பொறுப்புடன் விளையாடிய மாத்யூஸ் 42 பந்தில் அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். சுதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அக்சர் படேல் ‘சுழலில்’ மாத்யூஸ் 70 ரன் (80 பந்து, 10 பவுண்டரி) சிக்கினார். டிசில்வா (22), புஷ்பகுமாரா (3) ஏமாற்றினர். 

குல்தீப் யாதவ் பந்தில் பெர்ணான்டோ (5), கேப்டன் மலிங்கா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 42.4 ஓவரில் 207 ரன்னுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. தனன்ஜெயா (11) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 2, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சதம் விளாசிய விராத் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்தியா 4-0 என முன்னிலை வகிக்கிறது. 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 3ம் தேதி நடக்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory