» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட்கோலி, புவனேஷ்வர் குமார் அபாரம் : இலங்கைக்கு வெள்ளையடித்தது இந்தியா!!

திங்கள் 4, செப்டம்பர் 2017 10:12:56 AM (IST)இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இலங்கை அணியின் கேப்டன் தரங்கா திரும்பியதால், குசல் மென்டிஸ் கழற்றிவிடப்பட்டார். தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், லோகேஷ் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரஹானே, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டனர். மழையால் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் தரங்கா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் நிரோஷன் டிக்வெல்லா (2 ரன்), புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். இந்த தொடரில் அவர் வீழ்த்திய முதல் விக்கெட் இது தான். 2-வது விக்கெட்டுக்கு வந்த முனவீராவும் (4 ரன்) அவரது பந்து வீச்சுக்கே இரையானார். ஓரளவு அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் தரங்கா 48 ரன்களில் (34 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் திரிமன்னேவும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 280 ரன்களை நெருங்கும் போல் தெரிந்தது. அத்துடன் நடப்பு தொடரில் முதல் முறையாக தங்கள் அணிக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்து வலுவூட்டினர். அணியின் ஸ்கோர் 185 ரன்களாக (38.5 ஓவர்) உயர்ந்த போது, திரிமன்னே (67 ரன், 102 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

மேத்யூஸ்-திரிமன்னே கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் திரட்டியது கவனிக்கத்தக்கது. சிறிது நேரத்தில் மேத்யூசும் (55 ரன், 98 பந்து, 4 பவுண்டரி) வெளியேற்றப்பட்டார். கடைசிகட்டத்தில் இந்திய பவுலர்களின் பிடி வலுவாக இறுகியதால் இலங்கை அணி மீண்டும் தடம் புரண்டது. கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 53 ரன்களுக்குள் மட்டும் 7 விக்கெட்டுகளை இலங்கை அணி தாரைவார்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

பின்னர் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே 5 ரன்னிலும், ரோகித் சர்மா 16 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு மனிஷ் பாண்டே, கேப்டன் விராட் கோலியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ரன் விகிதத்தை நிலையாக உயர்த்தியது. மனிஷ் பாண்டே 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து களம் கண்ட கேதர் ஜாதவ் சிறப்பான பங்களிப்பை அளித்தார். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். கேதர் ஜாதவ் 73 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

46.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் விராட்கோலி 116 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 110 ரன்னுடனும், டோனி ஒரு பந்தில் ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய வீரர்கள் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருதையும், பும்ரா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

 

ஏற்கனவே முதல் 4 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. சொந்த மண்ணில் இலங்கை அணி இதுவரை இரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக தோற்றது கிடையாது. முதல் முறையாக இந்திய அணி, இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டி தொடரில் ‘ஒயிட்வாஷ்’ செய்து சாதனை படைத்து இருக்கிறது. 

பாண்டிங்கை சமன் செய்த விராட்கோலி

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். 194-வது ஒருநாள் போட்டியில் ஆடிய விராட்கோலி அடித்த 30-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் (375 ஒருநாள் போட்டியில் 30 சதம்) சாதனையை விராட்கோலி சமன் செய்தார். ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டியில்) அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விராட்கோலி அடித்த 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இலங்கைக்கு எதிராக அதிக சதம் அடித்து இருந்த தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory