» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கையை பந்தாடியது இந்தியா: டி-20 தொடரை கைப்பற்றியது

வெள்ளி 22, டிசம்பர் 2017 10:47:36 PM (IST)இந்தூரில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் இலங்கையை பந்தாடியது இந்தியா, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசரா பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி துவக்கத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா, இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார். மாபெரும் இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதனால் 35 பந்துகளில் சதம் விளாசினார். டி20-யில் அதிவேக சதம் விளாசியவர்களில் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லருடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். மொத்தம் 43 பந்துகளைச் சந்தித்து 10 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் குவித்து சமீரா பந்துவீச்சில் தனஞ்செயாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரரான ராகுல், தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். அவர், 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். மொத்தம் 49 பந்துகளைச் சந்தித்து 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் விளாசி பிரதீப் பந்துவீச்சில் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தோனி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 28 பந்துகளில் திசரா பெரேரா பந்துவீச்சில் போல்டானார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. 

பின்னர் இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நிரோஷன் டிக்வெல்லா 25 ரன்களில் வெளியேறினாலும், அதன் பிறகு கைகோர்த்த உபுல் தரங்காவும், குசல் பெரேராவும் இந்திய பந்து வீச்சை சிதறடித்தனர். குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹலின் ஓவர்களில் சர்வசாதாரணமாக பந்து சிக்சரை நோக்கி பயணித்தன. 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி இலக்கை நெருங்கும் போல் போன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது.

ரன்களை வாரி வழங்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப், சாஹல் ஆகியோருக்கு விக்கெட் கீப்பர் டோனி அவ்வப்போது ஆலோசனை வழங்கி, ஊக்கமூட்டினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தரங்கா 47 ரன்னிலும் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), குசல் பெரேரா 77 ரன்களிலும் (37 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) சுழல் வலையில் சிக்கினர். அதன் பிறகு வந்த வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. காயம் காரணமாக மேத்யூஸ் பேட் செய்ய வரவில்லை.

முடிவில் இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வெற்றி கண்டிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory