» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆட்டத்தின் போக்கை மாற்றினார் டி வில்லியர்ஸ்: தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

சனி 6, ஜனவரி 2018 12:40:33 PM (IST)ஓரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் டி வில்லியர்ஸ் என்று தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். .

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அசத்தலாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட் செய்யத் தீர்மானித்தது. மிகவும் நம்பிக்கையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4, அஸ்வின் 2, முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெறும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் விரைவாக, போட்டி தொடங்கிய 3-ஆவது பந்திலேயே புவனேஸ்வர் விக்கெட் வீழ்த்தினார். வனேஸ்வர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார் எல்கர். அவர் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அதேபோல், புவனேஸ்வர் வீசிய 2-வது ஓவரின் கடைசிப் பந்தில் மார்க்ரம் 5 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி நடையைக் கட்டினார். தென் ஆப்பிரிக்கா நிதானிக்கும் முன்பாக 4.5-ஆவது ஓவரில் ஹசீம் ஆம்லாவை வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். இதனால் 12 ரன்களுக்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா. அடுத்து இணைந்த டி வில்லியர்ஸ்-டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் தென் ஆப்பிரிக்க அணியை மீட்டுக்கொண்டு வந்தது. 

புவனேஸ்வர் குமாரின் 5-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசினார் டி வில்லியர்ஸ். இந்த ஓவர் தான் திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டேன். அவர் மேலும் கூறியதாவது: நல்லவேளை, எங்கள் செல்போன்களை வாங்கியிருந்தார்கள். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் யூபர் டாக்ஸியை அழைத்து ஹோட்டலுக்குச் சென்றுவிடலாம் என இருந்தேன். தரமான பந்துவீச்சை இந்தியர்கள் வெளிப்படுத்தினார்கள். நாங்கள் எப்படி ரன்கள் எடுக்கப்போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் டிவில்லியர்ஸின் மேதமையும் கேப்டனின் பொறுப்பான பேட்டிங்கும் எங்களைச் சரிவிலிருந்து மீட்டுக்கொண்டு வந்தது. அவர்களுடைய கூட்டணியால் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ஒரே ஓவரில் தொடர் பவுண்டரிகளால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் டி வில்லியர்ஸ். இந்திய பந்துவீச்சாளர்களைத் தங்களுடைய பந்துவீச்சின் திட்டங்கள் குறித்து யோசிக்கவைத்துவிட்டார். டி வில்லியர்ஸும் டு பிளெஸ்ஸிஸும் அணிக்கு மீண்டும் திரும்பியதால், அவர்கள் அனைவரும் 40 சராசரி ரன்களைக் கொண்டுள்ளதால், வலுவான பந்துவீச்சுக் கூட்டணியுடன் களமிறங்க முடிவெடுத்தோம். இதுதான் சிறந்த அணி என்று முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory