» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோலியை தேர்வு செய்ததால் பதவி பறிக்கப்பட்டதா? வெங்சர்க்கார் புகாருக்கு ஸ்ரீநிவாசன் மறுப்பு!!

சனி 10, மார்ச் 2018 5:37:43 PM (IST)

தன்னை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீகாந்த் தேர்வுக்குழு தலைவராக்கப்பட்டதற்கு அப்போதைய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன் காரணம் என்று திலிப் வெங்சர்க்கார் கூறியதையடுத்து வெங்சர்க்கார் பொய் சொல்கிறார் என்று ஸ்ரீநிவாசன் மறுத்துள்ளார்.

எஸ்.பத்ரிநாத்துக்குப் பதிலாக விராட் கோலியைத் தேர்வு செய்தது அப்போதைய பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனுக்கும், கேப்டன் தோனிக்கும் பிடிக்கவில்லை, இருவரும் பத்ரிநாத்துக்காக வாதாடினர், தோனியையும் ஸ்ரீநிவாசனையும் மீறி விராட் கோலியை அணியில் தேர்வு செய்ததையடுத்து தன் பதவிப் பறிக்கப்பட்டதாகவும், அப்போது பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தார் என்றும் வெங்சர்க்கார் திடுக் குற்றச்சாட்டு வைத்தார்.

இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீநிவாசன், "யாருக்காக அவர் பேசுகிறார்? அவரது உள்நோக்கம் என்ன? அது என்னவாக இருந்தாலும் அது உண்மையல்ல. ஒரு கிரிக்கெட் வீரர் இவ்வ்வாறு பேசுவது நன்றாகவே இல்லை. அவரது அணித்தேர்வு முடிவில் நான் தலையிட்டதாக கூறியது மிகவும் தவறு அதனால் அவர் பதவி பறிபோனதாகக் கூறுவதும் முற்றிலும் தவறு. தேர்வு விவகாரங்களில் நான் தலையிடவில்லை, என்ன மாதிரியான தலையீட்டை அவர் கூறுகிறார்?

எனக்கு திலிப் வெங்சர்க்கார் மீது எந்தப் பகைமையும் இல்லை, நான் தொடங்கிய பல நல்லத் திட்டங்களினால் வெங்சர்க்காருமே பயனடைந்துள்ளார். வெங்சர்க்கார் பெனிபிட் மேட்சுக்காக இந்தியா சிமெண்ட்ஸ் 1994ம் ஆண்டு ரூ.1 லட்சம் அளித்தது. நான் கிரிக்கெட் வீரராகா அவரை நிரம்பவும் மதிக்கிறேன், அவரை தேசிய ஹீரோவாகவே கருதுகிறோம். அவர் இப்படி பேசுவது வருத்தமளிக்கிறது. அதே போல் ஒரு வீரருக்குப் பதிலாக (பத்ரிநாத்துக்குப் பதிலாக விராட் கோலி) இன்னொரு வீரரைத் தேர்வு செய்வதை நான் விரும்பவில்லை என்றும் இதனால் அவர் பதவி இழந்தார் என்றும் கூறுவது தவறு காரணம் அவர் கூறும் அந்த 2 வீரர்களுமே இலங்கையில் 2008 தொடரில் ஆடினர்.

அவர் பதவியில் நீடிக்க முடியாததற்குக் காரணம் அவர் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக நீடிக்க முடிவெடுத்தார், எனவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விஷயத்தினால்தான் அவர் அணித்தேர்வுக்குழு தலைவர் பதவியை இழந்துள்ளார். நான் பிசிசிஐ தலைவராக இருந்த போது அவர் 2010-இலும் பிறகு 2014-இலும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்துள்ளாரே எனவே நான் அவர் பதவிக்கு இடையூறாக இருந்தேன் என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory