» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வங்கதேச வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்: சமூக வலைதளங்களில் வைரல் !!

திங்கள் 12, மார்ச் 2018 12:52:45 PM (IST)

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் முஷ்பிகுர் ரஹிம் வித்தியாசமாக பாம்பு நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நிர்ணயித்த 215 ரன்கள் இலக்கை வங்கதேச அணி 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வியக்க வைத்தது. 20 ஓவர் போட்டி வரலாற்றில் 4-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 72 ரன்கள் (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். வங்கதேசம் தரப்பில் மொத்தம் 12 சிக்சர்கள் பறந்தன. ஒரு இன்னிங்சில் வங்கதேசம் அடித்த அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். அதே சமயம் இலங்கை அணி, 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்தித்த 50-வது தோல்வி இதுவாகும். 20 ஓவர் போட்டியில் 50 தோல்விகளை தழுவிய முதல் அணி என்ற மோசமான சாதனை அவர்கள் வசம் சென்றுள்ளது.

வெற்றிக்குரிய ரன்னை எடுத்ததும், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்த 30 வயதான முஷ்பிகுர் ரஹிம், இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வைத்து சில வினாடிகள் பாம்பு ஸ்டைலில் நடனம் ஆடினார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் கூறுகையில், உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிக அவசியமாக இருந்தது. லிட்டான் தாசும் (43 ரன்), தமிம் இக்பாலும் (47 ரன்) அற்புதமான தொடக்கம் தந்தனர். ஆடுகளமும் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. எனது இந்த ஆட்டத்தை, பிறந்து 35 தினங்களே ஆன எனது மகனுக்கு சமர்ப்பிக்கிறேன். காலில் லேசான வலி இருக்கிறது. அடுத்த ஆட்டத்திற்குள் சரியாகி விடும் என்று நம்புகிறேன் என்றார்.

முஷ்பிகுர் ரஹிமின் பாம்பு நடனம் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுடன் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் கூறுகையில், எங்களது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் நஸ்முல் இஸ்லாம் ஒபு இந்த மாதிரி தான் கொண்டாடுவார். உள்ளூர் கிரிக்கெட்டிலோ அல்லது வங்கதேச பிரிமீயர் லீக் கிரிக்கெட்டிலோ அவர் விக்கெட் வீழ்த்தும் போதெல்லாம் வித்தியாசமாக பாம்பு டான்ஸ் ஆடி வேடிக்கை காட்டுவார். அதை நாங்களும் உற்சாகமாக ரசிப்பது உண்டு. அந்த பாணியில் தான் முஷ்பிகுர் ரஹிமும் ஆடியிருப்பார் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக நஸ்முல் இஸ்லாமுக்கு இந்த தொடரில் இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை. அவரது நடனத்தை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory