» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மணீஷ் - தினேஷ் அசத்தல்: இலங்கைக்கு இந்தியா பதிலடி!!

செவ்வாய் 13, மார்ச் 2018 8:29:32 AM (IST)



நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

கொழும்பில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் ஒருமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டத்தின் ஓவர்கள் 19-ஆக குறைக்கப்பட்டது.  டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் அடித்தார். குணதிலகா 17, குசல் பெரேரா 3, உபுல் தரங்கா 22, கேப்டன் திசர பெரேரா 15 ரன்கள் அடித்தனர். ஜீவன் மென்டிஸை ஒரு ரன்னில் போல்டாக்கினார் வாஷிங்டன் சுந்தர். 

டாசன் ஷனகா 19, அகிலா தனஞ்ஜெயா 5 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக சமீரா டக் அவுட்டானார். சுரங்கா லக்மல் 5 ரன்களுடனும், நுவான் பிரதீப் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை 19 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷர்துல் தாக்குர் 4, வாஷிங்டன் சுந்தர் 2, ஜெயதேவ் உனத்கட், யுவேந்திர சாஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் 11 ரன்களில் வெளியேற, உடன் வந்த ஷிகர் தவன் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அவர்கள் இருவருமே தனஞ்ஜெயா ஓவரில் வீழ்ந்தனர். பின்னர் வந்து சற்று நிலைத்த லோகேஷ் ராகுல் 18 ரன்கள் எடுத்திருந்தபோது தனது காலால் ஸ்டம்ப்பை தட்டி விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ரெய்னா அதிரடியாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 27 ரன்களே சேர்த்தார். இறுதியாக மணீஷ் பாண்டே-தினேஷ் கார்த்திக் கூட்டணி அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.

மணீஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 42, தினேஷ் 5 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2, நுவான் பிரதீப், ஜீவன் மென்டிஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்து வென்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலமாக, இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory