» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பெங்களூருவை 5 ரன்களில் வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!!

செவ்வாய் 8, மே 2018 11:29:24 AM (IST)



புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு காரணமாக பெங்களூருவை 5 ரன்களில் வீழ்த்தி  ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான 39-வது ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு பீல்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 5 ரன்னிலும், தவன் 13 ரன்னிலும், மணிஷ் பாண்டே 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷகிப் அல் ஹசன்-வில்லியம்சன் இணை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 56 ரன்களை எடுத்த வில்லியம்ஸன், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 35 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன், 12 ரன்களுடன் யூசுப் பதான், 8 ரன்னில் ரித்திமான் சாஹா வெளியேறினர். ரஷீத்கான், சித்தார்த் கெüல் ஆகியோர் தலா 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினர்.  20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 146 ரன்களையே எடுக்க முடிந்தது. பெங்களூரு தரப்பில் சிராஜ் அபராமாக பந்துவீசி 3 விக்கெட்டையும், டிம் செüதி 2 விக்கெட்டையும், உமேஷ், சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தரப்பில் மனன் வோரா, பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த பார்த்திவ் ஷகிப் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஆட வந்த கேப்டன் கோலி அதிரடி ஆட்டம் மேற்கொண்டார். 30 பந்துகளில் 39 ரன்களை சேர்த்த கோலி, ஷகிப் பந்தில் வீழ்ந்தார்.டி வில்லியர்ஸ் 5, மொயின் அலி 10, ரன்களில் ஆட்டமிழந்தனர். 

14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து பெங்களூரு அணி 93 ரன்களை எடுத்து திணறிக் கொண்டிருந்தது. மந்தீப் சிங்-கிராண்ட்ஹோம் இணை பெங்களூரு அணியை சரிவில் இருந்து மீட்டது. காலின் கிராண்ட்ஹோம் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டையும், ரஷீத்கான், கெüல், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory