» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஷிகர் தவன்: 87 பந்துகளில் சதம்!

வியாழன் 14, ஜூன் 2018 12:03:06 PM (IST)ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பலமாகக் கருதப்பட்ட பந்துவீச்சை நொறுக்கித் தள்ளி முதல் நாளின் முதல் பகுதியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார் ஷிகர் தவன். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்பின் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது வரலாற்று தருணம்.  நான் உண்மையில் ஆச்சரியத்தில் உள்ளேன் என கூறினார்.டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முதல் டெஸ்ட் என்பதால் இது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சைனி, குல்தீப் யாதவ், கருண் நாயர், தாக்குர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான விஜய், தவன், ராகுல் ஆகிய மூவருமே இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். இந்திய அணி முதல் 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஷிகர் தவன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். 119 பந்துகளில் தவன் - விஜய் ஜோடி 100 ரன்களை எட்டி இந்திய அணிக்குப் பலமான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. 

டி20 ஆட்டங்களில் ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசும் ரஷித் கான், டெஸ்ட் போட்டியில் மிகவும் தடுமாறினார். முக்கியமாக ஷிகர் தவன், ரஷித் கானின் பந்துவீச்சைக் குறிவைத்துத் தாக்கினார். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து வந்த ஷிகர் தவன், 87 பந்துகளில் சதத்தை எட்டினார். இதனால் முதல் நாளின் முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவன் 104, விஜய் 41 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான், 7 ஓவர்களில் 51 ரன்களை வாரிக் கொடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory