» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: ரஷியா அசத்தல் தொடக்கம் - சவுதியை வீழ்த்தியது!!

வெள்ளி 15, ஜூன் 2018 12:13:16 PM (IST)



உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதிஅரேபியாவை பந்தாடியது.

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் வீதம் மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் சந்தித்தன. இரு அணி வீரர்களும் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடினர். பந்து அரேபியாவின் கட்டுப்பாட்டில் சற்று அதிகமாக (60 சதவீதம்) வலம் வந்தாலும், ரஷிய வீரர்கள் தாக்குதல் பாணியை கையாண்டு, அவர்களின் தடுப்பு அரணை எளிதில் உடைத்தனர்.

12-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை ரஷியாவின் யுரி காஜின்ஸ்கி தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். இதன் மூலம் இந்த உலக கோப்பையில் முதல் கோலை அடித்தவர் என்ற சிறப்பை காஜின்ஸ்கி பெற்றார். 14-வது நிமிடத்தில் இன்னொரு கோல் விழுந்திருக்க வேண்டியது. அந்த ஷாட்டை அரேபியா கோல் கீப்பர் அப்துல்லா பாய்ந்து தடுத்து விட்டார்.

ரஷிய முன்னணி வீரர் ஆலன் ஜாகோவ், தசைப்பிடிப்பு காரணமாக 23-வது நிமிடத்தில் வெளியேறினார். ஆனாலும் ரஷியா நிலைமையை சமாளித்து திறம்பட ஆடியது. அரேபியாவின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரஷியாவின் மாற்று ஆட்டக்காரர் டெனிஸ் செரிஷிவ் 43-வது நிமிடத்தில் இடது காலால் பந்தை உதைத்து வலைக்குள் அனுப்பி அசத்தினார். இதையடுத்து முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ரஷியா முன்னிலை பெற்றது.

இதே வேகத்துடன் பிற்பாதியிலும் ரஷிய வீரர்கள் அலைஅலையாக தாக்குதல் தொடுத்தனர். ஒரு கட்டத்தில் அரேபியா வீரர்கள் சோர்ந்து போனார்கள். அந்த அணி வீரர்களால் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க இயலவில்லை. ரஷியாவின் ஆதிக்கத்துக்கும் அணை போட முடியவில்லை.

71-வது நிமிடத்தில் ரஷியாவின் மற்றொரு மாற்று ஆட்டக்காரர் ஆர்ட்டெம் டிஸ்யூபா தலையால் முட்டி கோல் போட்டார். வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 5 நிமிடங்களில் ரஷியாவின் டெனிஸ் செரிஷிவும், அலெக்சாண்டர் கோலோவின்னும் அடுத்தடுத்து கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். இதில் கோலோவின், ‘பிரிகிக்’ வாய்ப்பை ஒரே ஷாட்டில் பிரமாதமாக கோலாக்கினார்.

முடிவில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை பந்தாடியது. இரு அணி தரப்பிலும் தலா ஒரு வீரர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள். இந்த ஆட்டத்தை மொத்தம் 78 ஆயிரத்து 11 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். வெற்றியை அதிபர் புதின் உள்பட உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து

HUMANJun 18, 2018 - 12:07:33 PM | Posted IP 162.1*****

RUSSIANS KNOW HOW TO DEAL WITH ARABS.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory