» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வங்கதேச அணி 43 ரன்களுக்கு ஆல் அவுட்: டெஸ்ட் வரலாற்றில் வெ.இன்டீஸ் சாதனை

வியாழன் 5, ஜூலை 2018 5:39:22 PM (IST)

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில்  வெஸ்ட் இன்டீஸின் பந்துவீச்சாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் வங்கதேச அணி 8-வது இடத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9-வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கிய இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்டில், முதலில் விளையாடிய வங்கதேச அணி, 18.4 ஓவர்களில் 43 ரன்களுக்குச் சுருண்டுள்ளது.

20 ஓவர்கள் கூட முழுமையாக விளையாடாத இந்த இன்னிங்ஸில், தொடக்க வீரர் லிடன் தாஸ் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். கெமர் ரோச், 5 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மிங்ஸ் 3 விக்கெட்டுகளும் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

1974-ல் இந்திய அணி 42 ரன்களுக்குச் சுருண்டது. அதற்குப் பிறகு ஓர் டெஸ்ட் அணி இவ்வளவு குறைவாக ரன்கள் எடுத்தது இப்போதுதான். மேலும் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி எடுத்துள்ள குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரும் இதுவே. மேற்கிந்தியத் தீவுகளில் ஓர் அணி குறைவாக ரன்கள் எடுத்ததும் இப்போதுதான். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 68 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 158 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்மித் 58, பவல் 48 ரன்கள் எடுத்தார்கள். பிராத்வெயிட் 88 ரன்களுடனும் பிஷூ 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

வங்கதேச அணி இந்த 43 ரன்களால் பல புள்ளிவிவரப் பட்டியல்களில் இணைந்துள்ளது.

* வங்கதேச அணி மொத்தமே 112 பந்துகள் மட்டுமே சந்தித்துள்ளது. அதாவது 18.4 ஓவர்கள் மட்டுமே. குறைந்த பந்துகளைச் சந்தித்த அணிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. வங்கதேச அணியை விடவும் ஒரேயொரு பந்து குறைவாக விளையாடி முதலிடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. 

* இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் குறைந்தபட்ச ஸ்கோரா என்கிற கேள்வி எழும். இதைவிட மோசமாக 9 அணிகள் விளையாடியுள்ளன என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். 1955-ல் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 26 ரன்கள் மட்டும் எடுத்ததே குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். அந்த விதத்தில் இந்த 43 ரன்களுக்கு 10-வது இடம்தான் கிடைத்துள்ளது.

* வங்கதேச அணியின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு, 2007-ல் இலங்கைக்கு எதிராக 62 ரன்கள் எடுத்திருந்தது.

* மேற்கிந்தியத் தீவுகளில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோர் இது. கடந்த 44 வருடங்களில் ஓர் டெஸ்ட் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோரும் இதுவே. கடைசியாக 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

* கெமர் ரோச், ஐந்து ஓவர்களில் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 12 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகள்: நினைத்துப் பார்க்க முடியாத இச்சாதனையை நேற்றுடன் மூன்று பேர் நிகழ்த்தியுள்ளார்கள். மாண்டி நோபிள், ஜாக் காலிஸ் ஆகிய இருவரும் செய்த சாதனையை நேற்று ரோச்சும் நிகழ்த்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory