» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியின் மந்தமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி : கேப்டன் கோலி கருத்து

திங்கள் 16, ஜூலை 2018 11:49:00 AM (IST)


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் தடுமாறிய தோனியின் திறமை மீது கேள்வி எழுப்புவது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் ஜோ ரூட்டின் (113 ரன்) சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து நிர்ணயித்த 323 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முழுமையாக ஆடி 236 ரன்களில் அடங்கிப்போனது.

ரன்தேவை அதிகமாக இருந்த போது விக்கெட் கீப்பர் தோனி (37 ரன்/ 59 பந்து/ 2 பவுண்டரி) மந்தமாக ஆடியது பலத்த விமர்சனத்தை கிளப்பியுள்ளது. தோனியின் ஆட்ட அணுகுமுறை குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: எப்போதெல்லாம், தோனிக்கு அவர் விரும்பிய மாதிரி ஏதுவான ஷாட்டுகளை அடிக்க இயலாமல் போகிறதோ அப்போதெல்லாம் இது மாதிரி நிகழத்தான் செய்கிறது. அதற்காக உடனடியாக அவரது திறமை குறித்து கேள்வி எழுப்பி விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. 

அவர் அதிரடியாக ரன் குவிக்கும் போது, உலகிலேயே வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பதில் மிகச்சிறந்தவர் என்று பாராட்டுகிறார்கள். அதே சமயம் சரியாக ஆடாவிட்டால் சாடுகிறார்கள். இன்றைய நாள் தோனிக்கு மட்டுமல்ல, எங்கள் எல்லோருக்குமே மோசமான நாளாக அமைந்து விட்டது. எதிர்பார்த்தபடி ஒரு குழுவாக ‘பேட்டிங்’ கிளிக் ஆகவில்லை. தோனி உள்பட அனைத்து வீரர்களின் திறமை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தோனி மிகவும் அனுபவம் வாய்ந்தவர். 160 அல்லது 170 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக தோற்கக் கூடாது என்பதற்காக அவர் கடைசி வரை பேட்டிங் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் எங்களது தொடக்கம் ஓரளவு நன்றாக இருந்தது. உண்மையிலேயே இது நல்ல ஆடுகளம் தான். பிற்பாதியில் ஆடுகளத்தன்மை சற்று மெதுவாக காணப்பட்டது. ஆனால் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது (60 ரன்னுக்கு 3 விக்கெட்) பின்னடைவை ஏற்படுத்தியது. இது போன்று பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிப்பதற்கு கைவசம் விக்கெட்டுகள் இருப்பது அவசியமாகும். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் அதிரடி காட்டியிருக்க முடியும். இங்கிலாந்து பவுலர்கள் களத்தில் துல்லியமாக பந்து வீசினர். இது போன்ற ஆட்டங்கள் தான் வீரர்களின் திறமையை சோதித்து பார்ப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு கோலி கூறினார்.

விமர்சனத்துக்கு உள்ளான போதும் 37 வயதான தோனி அந்த ஆட்டத்தில் 33 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். தெண்டுல்கர், கங்குலி, டிராவிட் ஆகிய இந்தியர்கள் ஏற்கனவே இந்த மைல்கல்லை கடந்துள்ளனர். தோனி இதுவரை 320 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,004 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (மாலை 5 மணி) லீட்சில் நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory