» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர்!!

வெள்ளி 20, ஜூலை 2018 5:47:41 PM (IST)

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்  இரட்டைச் சதம் அடித்து  சாதனை படைத்தார்.

புலாவயோவில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் தொடக்க வீரர்களான ஃபகார் ஸமானும் இமாம் உல் ஹக்கும் அதிரடியாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் கிடைத்தது. பிறகு 20 ஓவர்களில் ஸ்கோர் 113 ஆக உயர்ந்தது. 25 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிறகு 92 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார் ஃபகார் ஸமான். 

இதன்பிறகு அவர் மேலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 115 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இமாம் 112 பந்துகளில் சதம் அடித்தார். இருவரும் 287 ரன்களை எட்டியபோது உலக சாதனை படைத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள் என்கிற பெருமையை அடைந்தார்கள். இதற்கு முன்பு 2006-ல் லீட்ஸில் ஜெயசூர்யாவும் உபுல் தரங்காவும் இங்கிலாந்துக்கு எதிராக  முதல் விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. பிறகு இந்தக் கூட்டணி 300 ரன்களையும் தாண்டியது. பிறகு, அணியின் ஸ்கோர் 304-ல் இருந்தபோது 42 ஓவரின் முடிவில் 113 ரன்களில் ஆட்டமிழந்தார் இமாம். 

இதன்பிறகு பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச தனிநபர் ஒருநாள் ஸ்கோரான சயீத் அன்வரின் 194 ரன்களைத் தாண்டினார் ஸமான். 148 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டி சாதனை படைத்தார் ஃபகார் ஸமான். இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதமெடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.  பாகிஸ்தானின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரும் இன்று அடிக்கப்பட்டது. இதற்கு முன்பு வங்கதேசத்துக்கு எதிராக 385 ரன்கள் எடுத்தது இன்று முறியடிக்கப்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் இது. ஃபகார் ஸமான் 201 ரன்களுடனும் ஆசிஃப் அலி 50 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

ஒருநாள் கிரிக்கெட் - அதிக தனிநபர் ரன்கள்

ரோஹித் சர்மா - 264 ரன்கள்
கப்தில் - 237* ரன்கள்
சேவாக் - 219 ரன்கள்
கெய்ல் - 215 ரன்கள்
ஃபகார் ஸமான் - 210 ரன்கள்


மக்கள் கருத்து

சாமிJul 21, 2018 - 09:21:45 PM | Posted IP 162.1*****

அடேய் tutyonline!! முதல்ல first line பேரு தப்பா இருக்கு ! அத மாத்து டா... Hahaha

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory