» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூதாட்ட விவகாரத்தில் சிஎஸ்கே வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்? கேப்டன் தோனி குமுறல்!!

வெள்ளி 22, மார்ச் 2019 5:54:31 PM (IST)2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்? என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆவணப்படத்துக்காக தனது மவுனத்தை கலைந்து முதல்முறையாக சூதாட்டம் குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது: 2013-ம் ஆண்டு என் வாழ்வில் மிகவும் கடினமான காலக்கட்டமாகும். அப்போது நான் அனுபவித்த வேதனையை போல் அதற்கு முன்பு ஒருபோதும் அனுபவித்தது கிடையாது. 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை எல்லோரும் கடுமையாக விமர்சித்தனர். ஏனெனில் அந்த உலக கோப்பையில் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டில் நடந்த விஷயம் இதற்கு முற்றிலும் மாறானது. மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் குறித்து மக்கள் பேசினார்கள். நாட்டிலேயே அதிகம் பேசப்படும் பொருளாக அது தான் இருந்தது.

சூதாட்ட விவகாரத்துக்காக வழங்கப்பட்ட தண்டனை சரியானது தான். ஆனால் வழங்கப்பட்ட தண்டனையின் அளவு சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். தனிப்பட்ட முறையிலும், கேப்டனாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன். இந்த விஷயத்தில் அணி என்ன தவறு செய்தது என்பது தான் எனது கேள்வியாகும். எங்கள் அணியின் நிர்வாகம் தரப்பில் தவறு இருந்தது உண்மை தான். ஆனால் வீரர்கள் என்ன தவறு செய்தார்கள்?.

‘ஸ்பாட் பிக்சிங்’ பிரச்சினையில் எனது பெயரும் இழுக்கப்பட்டது. ஸ்பாட் பிக்சிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நானும் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் யார் வேண்டுமானாலும் ஈடுபட முடியும். நடுவர்கள், பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் கூட ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட முடியும். ஆனால் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவதற்கு அணியில் பெரும்பாலான வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

எனது மவுனத்தை பலரும் தவறாக புரிந்து கொண்டார்கள். என்னை பொறுத்தமட்டில் இந்த விஷயத்தை மற்றவர்களுடன் பேச நான் விரும்பியது இல்லை. அதே நேரத்தில் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டேன். எனது கிரிக்கெட் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு எல்லாவற்றையும் விட கிரிக்கெட் தான் முக்கியம். நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து இருப்பதற்கும், சாதித்து இருப்பதற்கும் கிரிக்கெட் தான் காரணம்.

என்னை பொறுத்தவரை கொலை தான் பெரிய குற்றம் என்று நான் சொல்லமாட்டேன். கிரிக்கெட்டுக்கு துரோகம் செய்து ‘மேட்ச் பிக்சிங்’ செய்வது கொலையை காட்டிலும் பெரிய குற்றம். நான் அந்த குற்றத்தில் ஈடுபட்டு இருந்தால் அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். ஒரு போட்டியின் முடிவு அற்புதமாக இருந்து, அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்து இருக்குமோ? என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள். என் வாழ்க்கையில் இதுபோன்ற கடினமான விஷயங்களை இதற்கு முன் நான் சந்தித்ததில்லை. மேலும் இத்தகைய பிரச்சினைகளை மனதில் வைத்து கொண்டு தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல. இவ்வாறு தோனி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory