» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரிஷாப் பான்ட் அதிரடி அரைசதம்: மும்பையை வீழ்த்தியது டெல்லி

திங்கள் 25, மார்ச் 2019 12:39:06 PM (IST)



ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.  ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ரன்களை எளிதில் கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது. மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory