» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நோபால் சர்ச்சை: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை திரில் வெற்றி

வெள்ளி 29, மார்ச் 2019 8:55:33 AM (IST)

 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இந்த சீசனில் ஒரு வீரராக மும்பை அணிக்கு திரும்பினார்.

‘டாஸ்’ வென்றபெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்தியடித்த இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 52 ரன்கள் திரட்டினர். இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்த டி காக் (23 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் (33 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த திருப்தியுடன் நடையை கட்டினார்.

அடுத்து வந்த யுவராஜ்சிங், யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்கள் விளாசி அட்டகாசப்படுத்தினார். ஆனால் மறுபடியும் அதே ஓவரில் பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே முகமது சிராஜூவினால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டார். யுவராஜ்சிங் 23 ரன்களில் (12 பந்து, 3 சிக்சர்) வெளியேறினார். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (38 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பொல்லார்ட் (5 ரன்) ஆகியோருக்கு ஒரே ஓவரில் சாஹல் ‘செக்’ வைத்தார். தொடர்ந்து குருணல் பாண்ட்யா, மெக்லெனஹான் தலா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் ரன்வேகம் சற்று தளர்ந்தாலும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இறுதி ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி), ஹெட்மயர் 5 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் (முதலில் சுரேஷ் ரெய்னா) என்ற சாதனையுடன் வெளியேறினார். மறுமுனையில் டிவில்லியர்ஸ் போராடினார். அவர் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் கோட்டை விட்டார். அதை சாதகமாக பயன்படுத்தி சிக்சர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் 31 பந்தில் அரைசதத்தை எட்டினார்.

கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்கா தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

நோபால் சர்ச்சை: 

பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்று இருந்தது. அப்போது ரன் ஏதும் எடுக்காததால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரீப்ளேவில் பார்த்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால் என்பது தெரியவந்தது. அந்த நோபால் தான் பெங்களூரு அணியின் வெற்றியை பறித்துவிட்டது. நோபாலை ஆடுகள நடுவர் கவனிக்காததால் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். முடிவை மாற்றி அறிவிக்க கோரி நடுவர்களிடம் முறையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory